ETV Bharat / state

பொய் கேஸ் கொடுத்துட்டு 'ஜஸ்ட் ஃபன்' எனச் சொன்ன ஜெர்மனி இளைஞர்.. சென்னை போலீசார் செய்த தரமான சம்பவம்!

author img

By

Published : Jun 2, 2023, 5:07 PM IST

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழிப்பறி செய்யப்பட்டதாக பொய் புகார் கொடுத்துவிட்டு, போலீசாரிடம் ஜஸ்ட் ஃபன் எனக் கூறிய ஜெர்மனி இளைஞர் சிறைக்கு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai
சென்னை

சென்னை: ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரைடுரிச் வின்சென்ட்(23) என்ற இளைஞர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக, இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 24ஆம் தேதி வந்துள்ளார். பின்னர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் சென்ட்ரலில் இருந்து கால் டாக்சி மூலமாக வளசரவாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்றதாகவும், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் கத்தியை காட்டி மிரட்டி கையில் வைத்திருந்த லேப்டாப் மற்றும் இரண்டு பைகளை பறித்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இளைஞர் வந்த ராபிடோ ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது, ஜெர்மனி இளைஞர் திருவல்லிக்கேணியில் ஆட்டோவில் ஏறியபோது அவரிடம் லேப்டாப், பை உள்ளிட்ட எதுவும் இல்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் திருவல்லிக்கேணி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில், இளைஞர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்ததும், லேப்டாப் மற்றும் இரண்டு பேக்குகளை அங்கேயே வைத்துவிட்டு, வேண்டுமென்றே காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததும் தெரியவந்தது. இது குறித்து இளைஞரிடம் கேட்டபோது, அவர் கூலாக ஜஸ்ட் ஃபன் (Just Fun) என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ஜெர்மனி இளைஞர் வின்சென்ட்டை கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

இதையும் படிங்க: வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?

பின்னர் இது தொடர்பான தகவல் ஜெர்மனி தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ந்து போன தூதரக அதிகாரிகள் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் ஜெர்மனி இளைஞர் வின்சென்ட் மீது பொய்யாக புகார் அளித்தல், உண்மைக்கு மாறான தகவலை அளித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெர்மனி இளைஞரை பூந்தமல்லி ஒன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட், ஜெர்மன் இளைஞருக்கு 1,000 ரூபாய் அபராதம் மற்றும் ஒரு நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, ஜெர்மன் இளைஞரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட ஜெர்மன் இளைஞர் வெளியில் வந்த பிறகு ஜெர்மன் நாட்டிற்கு திரும்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமணம் ஆன ஒரே மாதத்தில் காதல் மனைவியை கொலை.. பலே நாடகம் அரங்கேற்றிய கோவை இளைஞர் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.