ETV Bharat / state

பொங்கல் தினங்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 9:57 AM IST

Chennai Metro Rail: பொங்கல் தினங்களான ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாளை மறுநாள், தமிழர் திருநாளாம் தைத்திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர், வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளையும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.

அதேநேரம், தென்மாவட்டங்கள், கோவை, பெங்களூரு, திருச்சி ஆகிய நகரங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயிலையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இவற்றில் முன்பதிவில்லா ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னையில் வசிக்கக் கூடிய வெளியூரைச் சேர்ந்த நபர்கள், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் ஆகியவற்றில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக பொங்கல் தினங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி 15, 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

இவற்றில் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். மேலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும், எனவே மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை; பெருங்களத்தூர், ஜிஎஸ்டி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.