ETV Bharat / state

சென்னையில் இளம்பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை!

author img

By

Published : Dec 23, 2022, 5:45 PM IST

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் இரண்டு இளம்பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

chennai
chennai

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 2 பெண்களுக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும், ஆந்திராவைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் இந்த சவாலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரு பெண்களும் நலமாக உள்ளனர்.

குளோபல் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் கருத்தரிப்புத்துறை தலைவரான மருத்துவர் பத்மபிரியா தலைமையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. பிறப்பிலேயே கருப்பை இல்லாத பெண்கள் மற்றும் கருப்பையை இழந்த இளம்பெண்களுக்கு, இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்கிறது என மருத்துவர் பத்மபிரியா தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவர் பத்மபிரியா மேலும் கூறுகையில், "அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் ஜிரி ஃப்ரோனெக்கின் நிபுணத்துவத்தின்கீழ், 2 இளம்பெண்களுக்கு மிகவும் சவாலான கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயதுப் பெண்மணிக்கு 16 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதற்கு முன்னதாக பிளாஸ்மா பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், அவரது ரத்த வகை, கருப்பையை வழங்கிய அவருடைய தாயாரின் ரத்த வகையோடு பொருந்தவில்லை. மற்றொரு இளம்பெண் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர். அந்த 24 வயது பெண்மணிக்கு 15 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது" என்றார்.

மருத்துவர் ஜிரி ஃப்ரோனெக்கின் கூறும்போது, "கருப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது, பிறவியிலேயே கருப்பை இல்லாத பெண்களுக்கும், கருப்பை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு, குழந்தை பெற முடியாத பெண்களுக்கும் நம்பிக்கைக்குரிய சிகிச்சையாகும். இந்த சிகிச்சை மூலம் இரண்டு இளம்பெண்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை இப்போதுதான் தொடங்கியுள்ளோம். அடுத்தடுத்து இதுபோன்ற சிகிச்சைகள் செய்ய இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுவுக்கு குளோபல் ஹெல்த் சிட்டி உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் சிகிச்சைப் பெற்ற பெண்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ரூ.66 கோடி மதிப்புமிக்க சொத்துகள் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.