ETV Bharat / state

சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 8:03 AM IST

Chennai Crime news: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1 பெண் உள்பட 27 நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே வாரத்தில் 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை குற்றச்செய்திகள்

சென்னை: சென்னையில் நடைபெறும் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த ஜனவரி 1 முதல் நவம்பர் 22 வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 421 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 93 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்ததில் 77 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 பேர், பாலியல் தொழில் நடத்தியதாக 13 பேர், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 4 பேர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் ஒருவர் என மொத்தம் 615 பேர் சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 16 முதல் 22 வரையிலான ஒரு வாரத்தில் 27 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்: அதன்படி, கடந்த நவம்பர் 2 முதல் 20 வரையிலான 15 நாட்களில், போதைப்பொருள் மற்றும் மன மயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 248 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 783 கிலோ கஞ்சா, 10 கிராம் கோக்கைன், MDMA எக்ஸ்டஸி, 85 டேபெண்டடோல் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகள் என 8O லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த நவம்பர் 8 அன்று கீழையூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா மற்றும் 2 கார்கள், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மத்திய உளவுப் பிரிவு சென்னை (CIU) அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 100 கிலோ கஞ்சாவினை, லாரியுடன் வேலூர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் கைப்பற்றி, இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், மதுரையைச் சேர்ந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடி போலீசார், பெங்களூருவில் இருந்து போதைப்பொருளை கடத்தி வந்த நைஜீரியாவைச் சேர்ந்த மார்செல் குயோ (31) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 10 கிராம் கோகைன் மற்றும் MDMA, எக்ஸ்டசி போதை மத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களின் 7 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு பண மோசடி: சிங்கப்பூரில் பல்வேறு பணியின்போது விபத்துகளில் காயம் அடைந்த தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொழிலாளர்கள், சிங்கப்பூர் நாட்டில் தங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, லால்குடி பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், 18 தொழிலாளர்களுக்கும் காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதாக கூறியிருந்த யோகேஸ்வரன், காப்பீட்டுப் பணத்தை போலியாக கையெழுத்து போட்டு மோசடி செய்து விட்டதாக 18 தொழிலாளர்களும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீட்டு பணம் வர இருந்த நிலையில், மொத்தமாக ரூ.5 கோடிக்கு மேலான 18 தொழிலார்களுக்கும் சேர வேண்டிய பணத்தை போலியாக கையெழுத்திட்டு மோசடி செய்ததாக புகார் மணுவில் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: பழங்குடியின சான்றிதழ் கேட்டு தலையில் தேங்காய் உடைத்து போராட்டம்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.