ETV Bharat / state

சென்னையில் 'குப்பையில்லா பகுதிகள்' திட்டம்.. எங்கெல்லாம் அமல்?

author img

By

Published : Feb 13, 2023, 1:00 PM IST

சென்னையில் குப்பையில்லா பகுதிகள்(Litter Free Corridors) என்ற புதிய திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் ‘குப்பையில்லா பகுதிகள்’ திட்டம்.. எங்கெல்லாம் அமல்?
சென்னையில் ‘குப்பையில்லா பகுதிகள்’ திட்டம்.. எங்கெல்லாம் அமல்?

சென்னை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவுகளை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் மூலம் நாள்தோறும் வீடுகளுக்கேச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பெறுவது, முக்கிய பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு சேகரிக்கும் குப்பைகள், லாரிகள் மூலம் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்தினாலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் சுமார் 5,400 மெட்ரிக் டன் குப்பைகள் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சி சார்பில் ‘குப்பையில்லா பகுதிகள்’ (Litter Free Corridors) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, பிப்ரவரி 11 முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் 442 சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல் (பேருந்து நிறுத்தங்கள் அருகில்), சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கிலோ மீட்டர் நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “தற்போது சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம்.

முழுமையாக அமல்படுத்த இன்னும் 1 வார காலம் ஆகலாம். தற்போதைக்கு அனைத்து மண்டலங்களிலும் குறிப்பிட்ட இடைவெளியில் குப்பைத்தொட்டி அமைத்து இருக்கிறோம். தூய்மைப் பணியாளர்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் சென்று அந்த குப்பைத் தொட்டியை சுத்தம் செய்வார்கள். இதற்கென தனியாக யாரையும் நியமிக்கவில்லை.

இருக்கும் தூய்மைப் பணியாளர்களை பிரித்து பணிக்கு அமர்த்தி இருக்கிறோம். அபராதம் பொறுத்தவரையில், தற்போது வரை அதை வசூலிக்க மாட்டோம். முதல் கட்டமாக விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்பட உள்ளது. தேவைப்படும்போது அபராதம் வசூலிக்கப்படும்" என்றனர்.

குப்பை இல்லாத பகுதி என பராமரிக்கப்படும் 18 சாலைகள்: திருவொற்றியூர் நெடுஞ்சாலை 5.8 கிலோ மீட்டர், மணலி காமராஜர் சாலை 2.8 கிலோ மீட்டர், மாதவரம் ஜி.என்.டி சாலை 7.2 கிலோ மீட்டர், அம்பத்தூர் சாலை - ரெட்ஹில்ஸ் சாலை 4.5 கிலோ மீட்டர், தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை 3.95 கிலோ மீட்டர், ராயபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை 3.4 கிலோ மீட்டர்,

பெரம்பூர் (தெற்கு) நெடுஞ்சாலை 1.05 கிலோமீட்டர், அம்பத்தூர் - ரெட்ஹில்ஸ் சாலை 4 கிலோ மீட்டர், அண்ணா நகர் பூந்தமல்லி நெடுஞ்சாலை 6.8 கிலோமீட்டர், கத்தீட்ரல் சாலை 1.1 கிலோமீட்டர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை 2.15 கிலோமீட்டர், கோடம்பாக்கம் தியாகராயா சாலை 1.5 கிலோ மீட்டர், கோடம்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை 1.5 கிலோ மீட்டர், வளசரவாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை 3.5 கிலோ மீட்டர், ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலை 10 கிலோ மீட்டர், அடையாறு எலியட்ஸ் கடற்கரை சாலை 0.8 கிலோ மீட்டர், பெருங்குடி ராஜீவ் காந்தி சாலை 3.2 கிலோ மீட்டர், சோழிங்கநல்லூர் ராஜீவ் காந்தி சாலை 11 கிலோ மீட்டர்.

இதையும் படிங்க: "கொசு ஒழிப்பு பணியை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும்" - மேயர் பிரியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.