ETV Bharat / state

மொபைல் செயலி மூலம் ரூ.10 லட்சம் மோசடி முதல் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனை வரை மாநகர குற்றச் செய்திகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 8:05 PM IST

Chennai Crime News: சென்னையில் விற்பனைக்காக வைத்து இருந்த 22 கிலோ கஞ்சாவைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல் பாடி பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு பண ஆசை காண்பிடுத்து தனியார் செயலி மூலம் 10 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

chennai-city-today-major-crime-news-today-on-october-28th-2023
மொபைல் செயலி மூலம் ரூ.10 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது!

சென்னை: பல்லாவரம் சுற்று வட்டார பகுதியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கொண்டு வந்து விற்பனை செய்து வந்த வாலிபரை காவல் துறை கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே அடையாறு ஆற்றின் கரையோரம் சந்தேகப்படும் விதமாக நபர் ஒருவர் சுற்றித் திரிவதாக நேற்று (அக். 27) மாலை சங்கர் நகர் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று அந்த நபரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த சாக்குப் பையில் சிறுசிறு பொட்டலங்களில் 22 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் அவரை காவல் துறையினர் விசாரணை செய்த போது அவர் ஆந்திர மாநிலம், காக்கிநாடா, கோபி கிருஷ்ணா காலணி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 28) எனத் தெரியவந்தது. மேலும், அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சென்னையிலுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள இளைஞர்களை குறிவைத்து சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இளைஞரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 36). இவரது செல்போனில் உள்ள செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் பார்த்து சிறிய அளவில் முதலீடு செய்தால், அதிகப் பணம் கிடைக்கும் என்று கும்பல் ஒன்று கார்த்தியை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் அளித்த வங்கிக் கணக்கில் தவணைகளாக ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்தி, இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சென்னை, தி.நகரைச் சேர்ந்த செல்வம் (வயது 42) என்பவர் பெயரிலான எஸ் பேங்க் வங்கிக் கணக்கில் கார்த்தி செலுத்திய பணம் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

மேலும் காவல் துறையினர் செல்வத்திடம் நடத்திய விசாரணையில், விவேகானந்தன், கடலூரைச் சேர்ந்த ஹலிகுல் ஜமால் (வயது 42), ஆஷ்கர் ஷெரீப் (வயது 38) ஆகியோர், வேலையில்லாதவர்களிடம் மொபைல் செயலி மூலம் பணம் வசூலித்து, வெளிநாடுகளில் செயல்படும் இணைய தள மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்து கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து, காவல் துறையினர் 3 பேரும் கைது செய்து வெளிநாட்டுக் கும்பல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கரூரில் போலி ஆவணங்களை வைத்து பாஸ்போர்ட் பெற்ற இலங்கைத் தமிழர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.