ETV Bharat / state

”சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா அதிகரிப்பு” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

author img

By

Published : Jun 4, 2022, 1:19 PM IST

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

”சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது” அமைச்சர் மா. சுப்பிரமணியன்
”சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: தி.நகர் கிரியப்பா சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுவன் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஜூன் 4) ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "உலக முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு 1,000-க்கும் மேல் பதிவாகிவருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மூன்று மாதத்திற்கும் மேலாக தொற்று பாதிப்பினால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

ஆனால் தற்போது சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், விஐடி, சத்யசாய் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களிடம் இருந்து தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

ஐஐடி மற்றும் சத்யசாயி கல்லூரியில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குணமடைந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல, விஐடி கல்லூரியில் 193 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். அங்கு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை குடியிருப்புகளில் தொற்று பாதிப்பு பரவத் தொடங்கியிருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று எதுவும் இல்லை. குறிப்பாக மண்டலம் 9,10 மற்றும் 11 ஆகிய இடங்களில் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. இதுவரை சென்னையில் 370 பேருக்கு லேசான அறிகுறிகளோடு தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னை தி. நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. அதில் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக சென்ற போது அவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர் மூலம் அவரது குடும்பத்திற்கும் தொற்று பரவி இருக்கிறது. 6 பேரும் தற்போது நலமாக இருக்கிறார்கள்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்பதையெல்லாம் தொடர்ந்து சென்னை மாநகராட்சி கண்காணித்து வருகிறது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்கள் முடிந்திருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கும். அவர்கள் மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை ஓஎம்ஆர் சாலையில் கிடந்த மர்ம பெட்டி... உள்ளே என்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.