ETV Bharat / state

கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஓய்வு பெற்ற அலுவலர்..!

author img

By

Published : Feb 20, 2020, 10:45 PM IST

Updated : Feb 20, 2020, 11:20 PM IST

சென்னை: மலேசியா, கொழும்பு, துபாயில் இருந்து 12 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ஓய்வு பெற்ற சுங்கத்துறை அலுவலர் என்பது குற்றப்பிரிவு புலனாய்வு காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை விமான நிலையம் தங்கம் கடத்தல் வழக்கு சென்னை விமான நிலையம் 12 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு சென்னை விமான நிலையம் கடத்தல் வழக்கு Chennai airport gold smuggling case 12kg gold smuggling case in Chennai airport Chennai airport hijacking case
Chennai airport gold smuggling case

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மலேசியா, கொழும்பு, துபாய் ஆகிய நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. ஐந்தரை கோடி மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்கம் சிக்கியது. வெளிநாடுகளிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாகவும் கடத்தல்காரர்களுக்கு விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் உடந்தையாக இருப்பதாகவும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் 10 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலர்கள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மலேசியா, இலங்கை, துபாய் விமானங்களில் வந்த பயணிகள் சுங்க சோதனைகளை முடித்துவிட்டு வெளியே வந்தனர். அவர்களை நிறுத்தி மீண்டும் சோதனை செய்தனர்.

18 பயணிகளிடம் நடத்திய சோதனையில் ரூ. 5 கோடியே 44 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 12 கிலோ 693 கிராம் தங்கக் கட்டிகள் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 18 பயணிகளையும் பிடித்து விமான நிலையத்திற்குள்ளே சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் கடத்தல் கும்பலிடம் பணியாற்றும் குருவிகள் என தெரியவந்தது.

பல்வேறு நாடுகளிலிருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருபவர்கள் என்றும் தெரியவந்தது. குருவிகளிடம் விசாரணை செய்தபோது சுங்கத்துறையில் உள்ள சில அலுவலர்களின் உதவியுடன் கடத்தல் பொருள்கள் வெளியே கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதை அறிந்த மத்திய வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, 2 விமான நிலைய சுங்கத்துறை ஆய்வாளர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தென் இந்தியாவில் சுங்க இலாகாவில் வரி விதிப்பாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அலுவலர் தான் கடத்தல் ஆசாமிகளுக்கு மூளையாக செயல்பட்டு சுங்கத்துறை அலுவலர்களின் உதவியை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற அலுவலரின் வீடு உள்ள சென்னை கொளத்தூரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

விசாரணை முடிந்து 18 பேரையும் மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் வெளியே அழைத்து வந்தனர். அப்போது குருவிகளின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் நின்றிருந்தனர். இவர்களுக்கும், அலுவலர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி அலுவலர்களை தாக்கிவிட்டு 18 பேரும் தப்பி சென்றுவிட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு விசாரணை அலுவலர் பிருதிவிராஜ் விமான நிலைய காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதுகுறித்து விமான நிலைய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படும் நிகழ்விடத்தில் விமான நிலைய கண்காணிப்பு கேமிரா பதிவு ஏதுமில்லை என்று காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசியா, கொழும்பு, துபாய் ஆகிய நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 12 கிலோ 693 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. 18 பேர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டபோது 50 பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து 18 பேரும் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

மேலும் சுங்க இலாகா ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற அலுவலர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி சென்ற 18 பேரில் 13 பேர் விசாரணைக்காக ஆஜரானார்கள். தங்கத்தை கடத்தி வந்தபோது பணியில் இருந்த அலுவலர்களை தள்ளிவிட்டு சென்ற வழக்கில் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து சோதனை செய்து தங்கம் உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றி வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:புகழ்பெற்ற தவில் இசைக் கலைஞர் திருவாளப்புத்தூர் டி.ஏ.கலியமூர்த்தி மறைவு!

Last Updated : Feb 20, 2020, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.