ETV Bharat / state

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

author img

By

Published : May 26, 2020, 7:30 PM IST

சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க உதவும் வகையில், தொழில்முனைவோர் சந்திக்கும் பிரச்னைகளைக் களைவதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் ஊரடங்கால் தொழில்துறையில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீண்டும் முழுவீச்சில் உற்பத்தியைத் தொடங்க உதவும் வகையில், தொழில்முனைவோர் சந்திக்கும் பிரச்னைகளைக் களைவதில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கரோனா பொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை, 17 தொழிற்பேட்டைகளில் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்நிறுவனங்கள் உடனடியாக மீண்டும் செயல்படுவதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன.

25 சதவிகிதம் பணியாளர்களுடன் இத்தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கலாம் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, கரோனா தொற்றுப் பரவல் உள்ள சிகப்பு மண்டலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல தடை விதித்துள்ளது. 55 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

பொது முடக்கம் காரணமாக இத்தொழில் நிறுவனங்களுக்கு இன்னும் பணி ஆணைகள் கிடைக்காததால், உற்பத்தியை மீண்டும் தொடக்கவும் முடியவில்லை. மத்திய நிதித்துறை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்க, உத்தரவாதம் அளிக்கப்பட்ட திட்டம் மூலம் மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 9.25 சதவிகித வட்டியில் உத்தரவாதத்துடன் கடன் அளிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் நடைமுறையில், ஏராளமான நிபந்தனைகளிடப்பட்டு சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு சலிப்பையும், எதிர்காலம் குறித்த கவலையையும் வங்கிகள் ஏற்படுத்தியுள்ளன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு 28 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் இத்தொழிற்சாலைகளின் உற்பத்தி, நாட்டின் ஏற்றுமதியில் 40 சதவிகித பங்கு வகிக்கிறது.

வேளாண் தொழிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிப்பதில் இத்தொழில் நிறுவனங்கள்தான் முன்னிலையில் உள்ளன. எனவே பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக உள்ள இத்தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களையும், நெருக்கடிகளையும் களைந்து, மீண்டும் உற்பத்தியைத் தொடங்கிட உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: TTD (டி.டி.டி) நில விற்பனைக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது ஆந்திர அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.