ETV Bharat / state

குட்கா ஊழல் வழக்கு: விஜயபாஸ்கர் மீதான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய சிபிஐக்கு உத்தரவு

author img

By

Published : Nov 23, 2022, 10:32 PM IST

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, போதிய விவரங்களுடன் மீண்டும் திருத்தம் செய்ய சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மீதான குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் சிபிஐக்கு உத்தரவு
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மீதான குற்றப்பத்திரிக்கையில் திருத்தம் சிபிஐக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்குச் சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரமாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டன.

இந்நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இதுவரை கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணபாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் (2016 செப்டம்பர் 5 மற்றும் 25ம் தேதி) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களது ஜாமீன் மனு சிபிஐ நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 நபர்களின் பெயர்கள் மட்டுமே சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அமைச்சர் மற்றும் டிஜிபி என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும், சிபிஐ போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால் அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபடும் என சிபிஐ விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இதனையடுத்து அந்த 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அதனை திருத்தம் செய்தும் சாட்சிகள் குறித்த விவரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விவரங்களை இணைத்து தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா, விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க: 53 ஆயிரம் என்ஜினியரிங் சீட் காலி.. ஒருவர் கூட சேராத 9 கல்லூரிகள்.. கலந்தாய்வு முடிவில் அவல நிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.