ETV Bharat / state

ஐஐடி-களில் சாதிய பாகுபாடு? - அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல்கள்...

author img

By

Published : Apr 25, 2022, 10:16 AM IST

இந்தியாவிலுள்ள அனைத்து ஐஐடி-களிலும் தொடரும் சாதிய பாகுபாடுகள் மட்டுமன்றி மாணவர்கள் தற்கொலை, இடைநிற்றல்கள் குறித்து வெளியான ஆர்டிஐ தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக இதனை முடிவுக்குக் கொண்டு வர சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு...

ஐஐடி-களில் இருக்கும் சாதிய பாகுபாடுகள்
ஐஐடி-களில் இருக்கும் சாதிய பாகுபாடுகள்

நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவில் திறமை மிக்க மாணவர்கள் உருவாக்கும் பொருட்டு கடந்த 1950-ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டதுதான் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள். டெல்லி, மும்பை, கான்பூர், சென்னை உள்பட நாடு முழுவதும் 13 இடங்களில் ஐஐடி இயங்கி வருகின்றது. ஆண்டுதோறும் ஏறக்குறைய 4 ஆயிரம் மாணவர்கள் படித்து இந்நிறுவனங்களிலிருந்து வெளியேறுகின்றனர்.

ஆனால், இந்நிறுவனங்களில் தொடர்ந்து சாதியப் பாகுபாடு நிலவுவதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன. அதனை அடிப்படையாகக் கொண்ட ஆர்டிஐ தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, டெல்லி, ஐதராபாத், கரக்பூர் உள்ளிட்ட நான்கு ஐஐடிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 398 பேராசிரியர்களில் வெறும் 49 பட்டியலினத்தவர்கள் மற்றும் 10 பழங்குடியினர் பேராசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

சுமார் 9ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் சென்னையில் மொத்தம் 598 பேராசிரியர்களில் 21 தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மட்டுமே பணிபுரிகின்றனர். டெல்லியில் 615 பேராசிரியர்களில் 18 பேரும், ஐதராபாத்தில் 484 பேரில் 8 பேரும், கரக்பூர் ஐஐடியில் 701 பேரில் வெறும் 8 பேர் என்கிற எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் வெறும் 2.4 விழுக்காடு மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

மாணவர்களின் இடை நிற்றலுக்கு காரணம் என்ன? இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் கூறுகையில், “:இந்தியாவில் ஐஐடி உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட 1958 காலகட்டத்திலிருந்து தற்போது வரை 60 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை மற்றும் பேராசிரியர்கள் பணி நியமனங்களில் எழும் சாதிய பாகுபாடு பிரச்சினைகளுக்கு இன்றுவரை முற்றுபுள்ளி வைக்க முடியவில்லை. தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் செயல்படும் ஐஐடிகளில் பேராசிரியர்கள் நியமனங்களில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன” என்கிறார்.

ஐஐடி-களில் இருக்கும் சாதிய பாகுபாடுகள்

இந்த ஐஐடி-களில் பயிலும் மாணவர்களின் இடை நிற்றலும் மிக அதிகமாக உள்ளது என்கிறார் கார்த்திக். மேலும் அவர் கூறுகையில், “கரோனாவிற்கு முந்தைய கடந்த 2019-20 கல்வியாண்டு நிலவரப்படி சென்னை ஐஐடியில் மொத்தம் 9882 மாணவர்கள் பயின்றார்கள். இதில் ஆதிதிராவிடர் (எஸ்சி) 1212 மாணவர்களும், பழங்குடியினர்(எஸ்டி) 526 மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டமேற்படிப்பு பயின்றார்கள். அதாவது மொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் ஆதிதிராவிடர் மாணவர்கள் 12 விழுக்காடு பழங்குடியினர் மாணவர்கள் 5 விழுக்காடு இதில் அடங்கும்.

கடந்த 2015-16 முதல் 2018-19ஆம் கல்வி ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் முதுநிலை படிப்பில் 286 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடைவிலகல் செய்துள்ளனர். அதில் 42 பேர் தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பழங்குடியினர் 25 மாணவர்களும் ஆவர். விழுக்காட்டின் அடிப்படையில் இடைவிலகல் செய்யும் மாணவர்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் எண்ணிக்கை பொது பிரிவினரைவிட அதிகமாகும்” என்கிறார்.

ஆதிக்க நிறுவனம்? இது குறித்து தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா கூறுகையில், “60 ஆண்டுகளை கடந்த பின்னரும்கூட ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களுக்கும், பேராசிரியர் பணியிடங்களுக்கும் சாதிய பாகுபாடு தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக பேராசிரியர் நியமனங்களில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளது. குறிப்பாக சென்னை ஐஐடியில் சாதியப் பாகுபாடு அதிகமாக உள்ளது. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பேராசிரியர்கள் 60 எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் 21 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பிற ஐஐடிகளிலும் இதே நிலைதான்” என்கிறார்.

அறிவுச்சமூகம் என்ற அமைப்பின் தலைவர் தமிழ்முதல்வன் கூறுகையில், “இந்திய அரசியல் சட்ட அமைப்பிற்கு உட்பட்ட அமைப்பு என்றபோதும், இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்காத நிறுவனமாக தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக நீதி மீறல்கள் இங்கு அப்பட்டமான ஒன்றாக உள்ளது. உயர்சாதி மக்களின் ஆதிக்க நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருகிறது. மாணவர் சேர்க்கையிலும் அதே போன்ற நிலை தொடர்ந்து நிலவுகிறது.

அதையும் மீறி தகுதி பெறும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி, அங்கிருந்து அவர்களாகவே வெளியேறும் நிலையையும் உருவாக்கிவிடுகிறார்கள். இதன் காரணமாக 14 மாணவர்கள் சென்னை ஐஐடியில் மட்டும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை விசாரிப்பதற்கு ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதற்கான சிறப்பு சட்டங்களையும் இயற்ற வேண்டும்” என்கிறார்.

எங்கே போனது இடஒதுக்கீடு முறை? மாணவர்கள் தற்கொலைகளில் சென்னை ஐஐடியே முதலிடம் வகிக்கிறது. சென்னை, மும்பாய், கான்பூர், ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட 8 ஐஐடிக்களில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் மொத்தம் 56 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை கொண்டுள்ளனர்.

உச்சகட்டமாக 2019ஆம் ஆண்டில் மட்டும் பாத்திமா உள்பட 4 பேர் சென்னை ஐஐடியில் உயிரிழந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் உன்னிகிருஷ்ணன் என்ற ஆய்வு மாணவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உள்ளிட்ட அனைத்து ஐஐடிகளிலும் பேராசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை கொண்டு வர வேண்டும்.

ஐஐடிகளில் பட்டியலின மாணவர்கள் தற்கொலைகள் மற்றும் இடை விலகல்கள் குறித்து தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: TECHKNOW-2022: சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதே தொழில் துறையின் வெற்றி- முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.