ETV Bharat / state

கரோனா பரவல்..10 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை கோரிய வழக்கு.. மனுதாரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

author img

By

Published : Jan 27, 2022, 6:30 PM IST

கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஓர் இடத்தில் 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கரோனா பரவல்
கரோனா பரவல்

சென்னை: மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "பொங்கல் நேரத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது, போட்டியாளர்கள், அமைச்சர்கள், அலுவலர்கள் என எவரும் தனிமனித விலகலை பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றப்படவில்லை.

கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஓர் இடத்தில் 10 பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று(ஜன.27) விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டுமெனவும், கரோனா கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே விதிகளை அறிவித்துள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

10 பேருக்கு மேல் ஓர் இடத்தில் கூடக்கூடாது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என கூறிய நீதிபதிகள், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர்.

இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் கே.கே.ரமேஷ் தெரிவித்ததை ஏற்று, வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கல்லூரி, பயிற்சி நிலையங்கள் திறக்க வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.