ETV Bharat / state

தமிழ்நாடு அரசு துணைவேந்தர்களை நியமிக்க முடியுமா? யூஜிசி முன்னாள் துணைத் தலைவர் விளக்கம்

author img

By

Published : Oct 27, 2022, 9:10 AM IST

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தரும் வரையில், வேந்தராக உள்ள ஆளுநர் தான் நியமிக்க முடியும் எனவும், இதற்கு கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே தீர்வாக அமையும் என பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்து நேற்று (அக்.26) பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனமத்தை விதிமுறைகளின் படி வேந்தர் தான் நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மோடி கொண்டுவந்த சட்டம்: "தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநரிடம் இருந்து மாநில முதலமைச்சருக்கு மாற்றுவதற்கு கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து எந்தவிதமான காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. ஆளுநர் கையெழுத்து போட்டால் மட்டுமே, சட்டமாக அமல்படுத்த முடியும். குஜராத்தில் 2013ஆம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்தபோது 'வைப்ரன்ட் குஜராத்' என்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பின்னர் 2013ம் ஆண்டில் ஆளுநரிடம் இருந்து வேந்தருக்கான அதிகாரங்களை எடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர், 2014 ஆம் ஆண்டில் பிரதமராக மோடி, பதவி ஏற்று டெல்லி வந்து விட்டார். பின்னர், குஜராத்தில் இயற்றப்பட்ட சட்டம் அப்படியே இருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆளுநரை நியமனம் செய்திருந்தால், குஜராத்தில் இயற்றப்பட்ட துணைவேந்தர் நியமனம் சட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை.

ஆளுநர் ஒப்புதல் தரும் வரையில், வேந்தராக உள்ள ஆளுநர் தான் நியமிக்க முடியும் - யூஜிசி முன்னாள் துணைத் தலைவர்

அரசே துணைவேந்தரை நியமனம் செய்கிறது: அதனைத்தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டில் ஓ.பி.ஹோலி என்ற பாஜக ஆளுநர் சென்ற பின்னர் தான், சட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். பின்னர் தான், குஜராத்தில் துணைவேந்தர்களை அரசே தான் நியமனம் செய்கிறது. ஆனால், வேந்தராக ஆளுநர் தான் தொடர்ந்து இருந்து வருகிறார். குஜராத்தில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு, 3 பேர் தேர்வு செய்து அளிக்கின்றனர். அவர்களில் இருந்து ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

இதேபோல, தமிழ்நாட்டில் அதே நடைமுறையை பின்பற்றினாலும், ஆளுநர் அவருக்கு வேண்டும் என்பவரை நியமனம் செய்வது தவறானது தான். தேடுதல் குழுவிற்கு ஆளுநர் குறிப்பிட்ட நபரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறினால், பாஜக இருந்தால் அக்கட்சியை சேர்ந்தவரையும், காங்கிரஸ் ஆட்சியில் அவர்களுக்கு வேண்டியவர்களையும், திமுக, அதிமுக ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு வேண்டியவர்களையும் நியமனம் செய்வது தவறு தானே?

மாநில பட்டியலுக்கு திரும்புமா கல்வி? தேடுதல் குழுவினர் ஆளுக்கு ஒரு பெயரை எழுதினாலும், ஆளுநர் சார்பில் நியமிக்கப்படுபவர்கள் அவருக்கு வேண்டிய பெயரை எழுதினால், அந்த நபரை ஆளுநர் நியமனம் செய்துவிட போகிறார். தமிழ்நாடு அரசு, ஒரே ஒரு வழி தான் செய்ய முடியும். கல்வி தற்பொழுது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் செயல்படுத்த முடியும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். கல்வி பொதுப்பட்டியில் இருக்கும் வரையில் கஷ்டம் தான்.

மாநிலப்பட்டியலில் கல்வி : கல்வி, மத்திய மாநிலப் பட்டியலில் இருக்கும்வரையில் துணைவேந்தர் நியமனத்தினை மாநில அரசு செய்யும் என கொண்டு வருவது மிகவும் சிரமம்தான். பாஜக ஆளும் குஜராத்தில் தான் செய்துள்ளனர். 2013 ஆம் ஆண்டில் துணை வேந்தர் நியமனம் மாநில அரசு மேற்கொள்ளும் என சட்டம் இயற்றப்பட்டாலும், 2015 ஆம் ஆண்டில் ஆளுநரால் அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும், ஆளுநர்தான் வேந்தராக இருக்கிறார். கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வரும் வரையில் வேந்தரை மாற்றுவது கடினம். கல்வி மாநிலப்பட்டியலுக்கு வந்தால் மாற்ற முடியும்.

மேற்கு வங்காளத்தின் ஆளுநராக இருந்த ஜகதீப் தங்கர் எவ்வளவு பிரச்சனைகளை கொடுத்தார். மாநில, மத்திய அரசில் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே பிரச்சனை கிடையாது. கல்வி பொதுப்பட்டியலில் இருக்கும் வரையில் துணைவேந்தர் நியமனப் பிரச்சனையை தீர்க்க முடியாது. துணைவேந்தர் நியமனத்தால் மாணவர்கள் கல்வியில் பாதிப்பு ஏற்படாது.

தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளிட்ட எந்த மாநிலத்தில் சட்டம் இயற்றினாலும், ஆளுநர் கையெழுத்திடாமல் எந்த மசோதாவும் சட்டமாக நடைமுறைக்கு வராது. காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை ஆளுநர் வேந்தராக இருக்கும் வரையில் அவர் தான் நியமிக்க முடியும். பல்கலைக்கழகங்களில் நிர்வாக குழுவினை போடும்போது, முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்களின் கல்வியை பாதிக்குமா? மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்துள்ளனர். மாநிலக் கல்விக்கொள்கை, தேசிய கல்விக் கொள்கை என தனித்தனியாக இருக்க முடியாது. இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். தேசியக்கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் மத்திய மாநில அரசுகள் தழுவி சென்றால் நல்லது.

நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைப்பது என்பது குறைவு தான். தமிழ்நாட்டில் கல்வி உயர்வாகத் தான் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு என தனியாக கல்விக் கொள்கை கொண்டு வந்து அதில் பட்டப்படிப்பு படிக்கும் ஆண்டுகளில் மாற்றம் (3+2) செய்தால் உயர்கல்வி, வேலை வாய்ப்பிலும் பாதிப்பு இருக்கும். தமிழ்நாட்டில் மொழிக் கொள்கையில் சரியாகத்தான் செய்து வருகின்றனர். ஆனால், ஆங்கிலம் கற்றுக்கொள்வதை குறைப்பது என்பது தவறானது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈநாட்டின் அமிர்தப் பெருவிழா: ஈநாடு குழுமத்தின் 'அழியாத இந்தியாவின் சுதந்திரப்போராட்டம்' எனும் புத்தகத்தை வெளியிட்ட பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.