ETV Bharat / state

சூரப்பாவை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் தடுக்கும் சிலர்!

author img

By

Published : Oct 16, 2020, 5:24 PM IST

Updated : Oct 16, 2020, 5:34 PM IST

சென்னை: சூரப்பாவை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு
பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்டபொம்மனின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் முருகன், வீரபாண்டிய கட்டபொம்மனின் ஐந்தாம் தலைமுறை நேரடி வாரிசு வீமராஜா, இல. கணேசன், வி.பி. துரைசாமி, நரேந்திரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அப்போது மறைந்த பாடகர் எஸ்.பி.பி., அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், “அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் இட ஒதுக்கீடு பாதிப்படையும் என்று சிலர் தவறாக பேசிவருகின்றனர். இட ஒதுக்கீடு அரசியல் சாசனம் வழங்கும் உரிமை. இதனால் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுதந்திரமாகச் செயல்படும் வேளையில், அரசின் விதிகளுக்கு உள்பட்டு செயல்பட வேண்டும். சூரப்பாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவது சரியில்லை. ஆளுநருக்குக் கடிதம் எழுதுவதற்கு துணைவேந்தராக சூரப்பாவுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அதை அவர் பயன்படுத்திவருகிறார். துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரமில்லை.

சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுதந்திரமாகச் செயல்பட முயற்சிக்கிறார். சூரப்பாவை சுதந்திரமாகச் செயல்படவிடாமல் சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர் ” எனக் குற்றஞ்சாட்டினார்.

ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சியும் ஒன்றிணைத்து போராட வேண்டும் என்ற ஸ்டாலின் அறிக்கைக்கு? பதிலளித்த எல். முருகன், ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரத்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தான் பாஜக நினைக்கிறது என்றார்.

பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் குறித்து கேட்ட கேள்விக்கு, “எல்லாரும் கருத்துரிமை பற்றி பேசுகிறார்கள். சினிமா நடிப்பது அவரின் உரிமை. அதை நாம் ஏன் தடுக்க வேண்டும். இலங்கையில் தமிழ் சொந்தங்கள் கொத்து கொத்தாக இறப்பதற்கு அன்றைய ஆட்சியில் இருந்த திமுகவும் காங்கிரஸ் தான் காரணம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க...தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்பி ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Last Updated : Oct 16, 2020, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.