ETV Bharat / state

’பக்கத்து மாநிலங்களில் பத்திரிகை விளம்பரத்திற்கு பணம் செலவழிக்கும் தமிழ்நாடு அரசு’ - அண்ணாமலை தாக்கு

author img

By

Published : Aug 20, 2021, 2:21 PM IST

சென்னை: மக்கள் திட்டங்களுக்கு பணம் இல்லை என்று கூறும் தமிழ்நாடு அரசு, தனது நூறு நாள் சாதனை குறித்து பக்கத்து மாநிலங்களில் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து பணம் செலவழித்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனாவினால் பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதே சமயம் கடன் அளவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்திய நாட்டின் பிற மாநிலங்களிலும் கடன் வாங்குவார்கள். ஆனால் அவை எல்லாம் முதலீடு செய்ய வாங்கப்படும் கடன் ஆகும். ஆனால் இங்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் நிதி நிலவரம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார். பட்ஜெட் உரையிலும், தமிழ்நாட்டில் பெருகிவரும் கடன் சுமை குறித்தும், தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பு குறைத்தும் புள்ளி விவரங்களுடன் விளக்கி இருந்தார்.

1999-2000ஆம் நிதி ஆண்டில் 18,989 கோடி ரூபாய் கடன் இருந்தது. இது 2000-2001இல் 28,685 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாயாகவும், 2015-2016இல் 2,11,483 கோடி ரூபாயாகவும் இந்தக் கடன் உயர்ந்தது. கடந்த 2017-2018இல் 3,14,366 கோடி ரூபாயாக இருந்தது. 2021ஆம் ஆண்டில் மொத்த கடன் 5,70,189 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டால் பெருகியுள்ள கடன்

இதனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் மொத்தம் 2,63,976 ரூபாய் கடன் உள்ளது. தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது 3.16 விழுக்காடாக உள்ளது. இதற்கு முன் தமிழ்நாடு இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது.

இந்த பட்ஜெட்டின் கவலைக்குரிய அம்சம் என்னவெறால், அது தமிழ்நாடு அரசின் பெருகிவரும் கடன்தான். இனி என்ன செய்து எப்படி இந்தக் கடனை அரசாங்கம் திரும்பக் கட்டி முடிக்கப்போகிறது என்ற கேள்விக்கு திமுக அரசின் பட்ஜெட்டில் பதில் கிடைக்காமலேயே இருக்கிறது.

பக்கத்து மாநிலங்களில் விளம்பரங்கள்

இந்த ஆட்சியின்‌ 100 நாள்‌ செயல்பாடுகளில் நீட் தேர்வு, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய், டீசல், பெட்ரோல் விலை, என்று எல்லா வாக்குறுதிகளையும் நம்பி மக்கள்‌ ஏமாற்றம்‌ அடைந்து நிற்கிறார்கள்‌.

இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற இயலாமல் போனதற்கு காரணம் அரசின் மோசமான நிதி நிலைமை என்று கூறும் அரசு, தாங்கள் நூறு நாள் சாதனைகளை கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கூட பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி பெரும் பொருட்செலவு செய்து வருகிறார்கள்.

செலவீனங்களைக் குறைக்க வேண்டும்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவே அரசிடம் செலவுத் தொகை இல்லை என்று சொல்லும் தமிழ்நாடு அரசு, எந்த அடிப்படையில் பல கோடி ரூபாய் செலவில் பிற மாநிலங்களில், பிற மொழிகளில், முழுப்பக்க விளம்பரங்களை செய்கிறது. இப்படி விளம்பரம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

இன்னும் 200 நாள்கள், 300 நாள்கள் என்று விளம்பரச் செலவுகள் கூடிக் கொண்டே இருக்குமோ, என்று அச்சப்பட வேண்டியிருக்கிறது. வருவாயைப் பெருக்குவது விட செலவினங்களை சுருக்குவது நல்லது. ”ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை” என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு மதிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, பெருவாரியான காரம்...’ - திமுக ஆட்சி குறித்து அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.