ETV Bharat / state

பாதியில் நிற்கும் பாதயாத்திரை.. அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம்.. காரணம் என்ன..?

author img

By

Published : Aug 5, 2023, 11:02 PM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரையை பாதியில் விட்டுவிட்டு நாளை டெல்லிக்கு திடீரென பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த தகவல் வெளியான நிலையில் அதற்கான காரணம் என்னவென்று கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம்
அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரை கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த பாதயாத்திரை இன்று (ஆக.05) ஒன்பதாவது நாள் நிறைவு செய்தது. ராமேஸ்வரத்தில் தொடங்கிய பாதயாத்திரை சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக தற்பொழுது மதுரையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நாளைக்கு அண்ணாமலை டெல்லிக்கு செல்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலமாக அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கும், அண்ணாமலைக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. பாதயாத்திரை தொடக்க விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொலைபேசி மூலம் அண்ணாமலை அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "பிரதமர் மோடிக்கும், டெல்லி தலைமைக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை பற்றி தெரிந்த அளவிற்கு அண்ணாமலைக்கு தெரியவில்லை" என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "அரசியல் விஞ்ஞானிக்கு பதில் கூறி என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை" என தெரிவித்திருந்தார். இதற்கு பதில் விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவினரை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனத்தை சந்திக்க நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து, "அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி. கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திலேயே தலைவராகி விட்டார். ஆனால், நான் அப்படி அல்ல, 40 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருக்கின்றேன்" என செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

இதற்கு, இன்று மதுரையில் பாதயாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எல்லாம் பதில் கூறி என்னுடைய தரத்தை நானே குறைத்துக் கொள்ள விரும்பவில்லை" என மீண்டும் அதே கருத்தை தெரிவித்தார். நேற்றைய தினம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், நமது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களையும், நிர்வாகிகளையும் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்கிறார் என அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில் டெல்லி பாஜகவை தொடர்பு கொண்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் அண்ணாமலை குறித்து ஒரு சில விஷயங்களை பேசியுள்ளனர். இந்த நிலையில் நாளை மதுரையில் நடைபெறும் பொது கூட்டத்தை ரத்து செய்துவிட்டு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அழைப்பின் பேரில் அண்ணாமலை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவினரை விமர்சனம் செய்வது நல்லதல்ல என்றும் பாஜகவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் மட்டும் கவனம் செலுத்துமாறும் அண்ணாமலைக்கு அறிவுறுத்தப்படலாம். மேலும், பாதயாத்திரைக்கான வரவேற்பு, அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஜெ.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை செய்யலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு காசு தந்து கூட்டத்தை அழைத்து வருகிறார்’ - திருநாவுக்கரசர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.