ETV Bharat / state

சென்னை ஐஐடி உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 'BharOS' ஆப்

author img

By

Published : Jan 19, 2023, 10:19 PM IST

சென்னை ஐஐடி உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 'BharOS' என்ற மொபைல் ஆப்பை கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள தகவல்கள் வெளிநாடுகளுக்கு திருடப்படுவது தடுக்கப்பட்டு இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை ஐஐடி உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் 'BharOS' ஆப்

சென்னை: சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனம், இந்தியாவில் மொபைல்போன் வைத்திருக்கும் 100 கோடி பேர் பயன்பெறும் வகையில் உள்நாட்டு தொழில் நுட்பத்திலான மொபைல் இயங்குதளம் (App) ஒன்றை உருவாக்கியுள்ளது. 'BharOS' என்று அழைக்கப்படும் இந்த மென்பொருளை கடைகளில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்களில் நிறுவ முடியும். பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்கும்.

கடுமையான தனியுரிமை, பாதுகாப்புத் தேவைகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு தற்போது BharOS சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பயனர்கள் மொபைல்போன்களில் வரையறுக்கப்பட்ட செயலிகளில் ரகசியத் தகவல் தொடர்புகள் தேவைப்படும்போது அவற்றைக் கையாள இந்த இயங்குதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இதன் பயனர்கள் தனியார் 5ஜி நெட்வொர்க் மூலம் தனியார் கிளவுட் சேவைகளை அணுக வேண்டியிருக்கும்.

ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனின் (IIT Madras Pravartak Technologies Foundation) தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான ஜண்ட்கே ஆபரேஷன்ஸ் லிமிடெட் (JandK Operations Private Limited -JandKops) 'BharOS' இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷனுக்கு பல்துறை சார்ந்த இணையம் மற்றும் அதனைப் பயன்படுத்துவோருக்கான தேசிய இயக்கத்தின் கீழ் (National Mission on Interdisciplinary Cyber-Physical Systems - NMICPS) மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்து வருகிறது.

BharOS மொபைல் இயங்குதளம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, 'BharOS Service என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொபைல் இயங்குதளமாகும். அதிக சுதந்திரம், கட்டுப்பாடு, நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றைப் அளிப்பதுடன், பயனர்கள் தங்களுக்குத் தேவை எனக் கருதும் செயலியை மட்டுமே பயன்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. பயனர்கள், தங்கள் மொபைல் சாதனங்களில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் திருப்புமுனையாக இந்த புதுமையான அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் BharOS-ஐ ஏற்றுக் கொள்ளவும், பயன்பாட்டை அதிகரிக்கவும் மேலும் பல தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், உத்திசார் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற ஐஐடி மெட்ராஸ் ஆர்வம் கொண்டுள்ளது.

BharOS இயங்குதளத்துடன் எந்தவொரு நிலையான செயலிகளும் இருப்பதில்லை. பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது நம்பிக்கை இல்லாத செயலிகளைப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்துவதில்லை என்பதுதான் இதன் பொருள். அத்துடன் பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் உள்ள செயலிகளுக்கு அனுமதி அளிப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்க முடியும். தங்களுக்கு நம்பிக்கையான எந்தெந்த செயலிகளை அனுமதிக்கலாம், எந்தெந்த அம்சங்கள் அல்லது தரவுகளை வைத்துக் கொள்ளலாம் என்பதை பயனர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

மேலும் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் தகவல்கள் பிறருக்கு செல்லாமல் இருப்பதற்காக BharOS மொபைல் செயலியை பயன்படுத்த முடியும். மேலும், பிற நிறுவனங்களின் ஆப் பயனாளரின் அனுமதி இன்றி மொபைலில் காண்பிக்காது.

இந்த செயலியை இந்தியாவில் 4 கோடி பேருக்கும் மேல் பயன்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்தால், மொபைல் ஃபோனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் ஹார்டுவேர் தகவல்களை அளித்து இந்த சாப்ட்வேரை பதிவு ஏற்றம் செய்யும். மேலும், மத்திய அரசும் இந்த சாப்ட்வேரை வெளிநாட்டு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டுமென கூறினால், இந்தியாவில் உள்ள தகவல்கள் வெளிநாடுகளுக்கு திருடப்படுவது தடுக்கப்படும்.

இந்த செயலி ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் தற்பொழுது நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. தனியார் மொபைல் நிறுவனங்கள் இந்த செயலியை தங்கள் நிறுவனங்களின் மொபைல் ஃபோனில் பதிவேற்றம் செய்ய கேட்டால் நாங்கள் தயாராக உள்ளோம்’ எனத் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் BharOS செயலியை முதலில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்களை தடுக்க முடியும் என கூறினார்.

BharOS மொபைல் இயங்குதளத்தை உருவாக்கிய ஜான்ட்கே ஆபரேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திக அய்யர் கூறுகையில், ‘கூடுதலாக, மொபைல் சாதனங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் 'நேட்டிவ் ஓவர் தி ஏர்' (Native Over The Air) அப்டேட்களையும் BharOS வழங்கி வருகிறது. பயனர்கள் அனுமதி அளிப்பதற்குக் காத்திராமல், NOTA அப்டேட்கள் தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு மொபைல் சாதனத்தில் நிறுவப்படுகின்றன. சமீபத்திய பாதுகாப்பு இணைப்புகள், திருத்தங்கள் போன்றவற்றுடன் மொபைல் சாதனம் எப்போதும் லேட்டஸ்ட் பதிப்புடன் இருப்பது இதன்மூலம் உறுதி செய்யப்படும். NDA, PASS மற்றும் NOTA ஆகியவற்றின் மூலம், இந்திய மொபைல் போன்கள் நம்பகமானவை என்பதை BharOS உறுதி செய்கிறது.

அந்தந்த நிறுவனத்திற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 'பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீஸ்' (Private App Store Services -PASS)-ல் இருந்து நம்பகமான செயலிகளை BharOS மூலம் அணுக முடியும். நிறுவனங்களுக்கான சில பாதுகாப்பு மற்றும் தனியுரிமைத் தரநிலைகளைக் கொண்டிருக்கும் செயலிகள் குறித்த தொகுக்கப்பட்ட பட்டியலை PASS மூலம் பெறலாம். பயனர்கள் தங்கள் மொபைலில் நிறுவும் செயலிகள் பயன்படுத்தப் பாதுகாப்பானவை. சாத்தியமான பாதுகாப்பு, பாதிப்புகள் அல்லது தனியுரிமை அச்சங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டுவிட்டன என்பதை இதன் மூலம் உறுதியாக நம்பமுடியும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரத்தான திருமணம்.. பணம் தர மறுத்த சென்னை ஜெயச்சந்திரன் மஹால்; அரியலூர் கோர்ட் குட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.