ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு.. ‘சென்னையில் 290 பேர் பாதிப்பு’ - ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 4:19 PM IST

தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் டெங்கு விழிப்புணர்வு முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று (செப்.17) ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு

சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வால்டாக்ஸ் சாலை, ஜட்காபுரத்தில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இன்று (செப்.17) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, "டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக ஜட்காபுரத்தில் இன்று ஆய்வு செய்தோம். சென்னையில் மழைக்காலத்தில் வரக்கூடிய டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அனைத்து நோய்களையும் தடுப்பதற்காக தினமும் 50 தெருக்களில் ஆய்வு செய்து வருகிறோம்.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 290 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த விகிதம் கடந்தாண்டை விட குறைவாக இருந்தாலும், கடைசி 3 மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் 26 பேருக்கு மட்டுமே டெங்கு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரவாயல் பிள்ளையார்கோவில் தெருவில் டெங்கு பாதிப்பு அதிகளவில் நிகழக்கூடிய சூழல் நிலவியுள்ளதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கவனகுறைவுடம் செயல்படக்கூடாது என்பதற்காக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டெங்கு கொசு நல்லத்தண்ணீரில் முட்டைப் போடும் போது, ஒன்றரைை நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் அவை புழுக்களாக மாறுகிறது. தொடர்ந்து 6 முதல் 8 நாட்களில் அந்த புழுக்கள் பீபாவா மாறுகிறது. பின்னர் 21 நாட்களுக்குள் லட்சக்கணக்கான கொசுக்களாக மாறுகிறது.

பரவலாக கொசு மருந்துகள் அடித்தாலும், அவை வளர்ந்தக் கொசுக்களை தடுப்பதற்குத் தான் ஏதுவாக இருக்கிறது. இதனால் பன்முக நடவடிக்கை எடுத்து வருகிறோம். வீட்டிற்கு வீடு சென்று பார்வையிட்டு வருகிறோம். சென்னையில் டிரம்களில் தண்ணீர் தேக்கி வைக்கும் வழிமுறை அதிகளவில் பின்பற்றப்படுகின்றன. இதனால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் வித்தத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் டிரம்களை முழுவதுமாக மூடி வைக்க வேண்டும்.

17 லட்சம் வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். காலிமனைகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். கட்டுமானப் பணியில் உள்ள நல்லதண்ணீர், கல்வி நிறுவனங்கள், விடுதி போன்றவற்றின் அருகில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது டெங்கு கொசு வேகமாக வளரும். இந்த தீவரித்தன்மையைக் கட்டுப்படுத்த, சிறப்பு முகாம்களை நடத்துகிறோம். தற்போது சளி, தலைவலி டெங்குவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒரு சில பிரிவினர் நிலவேம்பு கசாயங்களை விரும்புகின்றனர். எனவே நில வேம்பு, கபசுர குடிநீர் போன்ற கசாயங்களை தயார் நிலையில் வைத்து, சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் கொடுக்கிறோம். கூடுதலாக தண்ணீர் தரத்தையும் ஆய்வு செய்து வருகிறோம். பொதுமக்கள் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் இருந்தால், மருந்தகங்களை தவிர்த்து மருத்துவர்களை அனுக வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையின்றி நோயாளிகள் எந்த மருந்துக்களையும் பயன்படுத்தக்கூடாது. மேலும் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு டெங்கு புதிய நோய் கிடையாது. இது முன்னதாக 140 நாடுகளில் உள்ளது. காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும், டெங்கு பாதிப்புகள் ஏற்பட்ட பின்னரும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். இறப்பின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்து வருகிறோம். காய்ச்சலை கண்டுபிடித்து முன்கூட்டியே சிகிச்சை அளித்தால் டெங்கு பரவலை முழுமையாக தடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிபா வைரஸ் எதிரொலி: கொடைக்கானல் வரும் கேரள பயணிகளுக்கு பரிசோதனை... உள்ளூர் மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.