ETV Bharat / state

திமுக பொதுச்செயலாளருக்கு இவ்வளவு சொத்துகளா?

author img

By

Published : Mar 16, 2021, 10:56 AM IST

வேலூர்: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், அவரது மனைவி இருவரின் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 29.62 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியத் தலைவர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்யும்போது, சொத்து மதிப்பு, தங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட குற்ற வழக்குகளின் விவரங்களையும் வேட்பாளர்கள் குறிப்பிட வேண்டும்.

சொத்து விவரம்

அந்த வகையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட நேற்று (மார்ச்.15) பத்தாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின்படி, துரைமுருகன் கையிருப்பில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 65 ரூபாய் தொகையும், அவரது மனைவி சாந்தகுமாரி கையிருப்பில் 13 லட்சத்து 67 ஆயிரத்து 702 ரூபாயும் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனி வங்கிக் கணக்கு தொடங்கி அந்தக் கணக்கில் இருந்துதான் தேர்தல் தொடர்பான செலவுகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காட்பாடி இந்தியன் வங்கி கிளையில் துரைமுருகன் கணக்கு தொடங்கியுள்ள நிலையில், அதில் தேர்தல் செலவுத்தொகையாக 30 லட்சத்து 74 ஆயிரத்து 622 ரூபாய் தொகையை இருப்பு வைத்துள்ளார்.

தங்கம், வைரம் விவரம்

  • துரைமுருகன் வசம் 500 கிராம் தங்கம், ஒரு காரட் வைரம்
  • துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி வசம் இரண்டாயிரத்து 224 கிராம் தங்கம், 5.5 காரட் வைரமும் உள்ளது.

துரைமுருகன் வசம் ஒரு பார்ச்சூன் கார் உள்ளது. இருவருக்கும் கடன் நிலுவை எதுவும் இல்லாத நிலையில், துரைமுருகன் 86 லட்சத்து 12 ஆயிரத்து 782 ரூபாய் தொகையையும், சாந்தகுமாரி ஒரு கோடியே 22 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தொகையையும் மற்ற நபர்களுக்கு கடனாகக் கொடுத்துள்ளனர்.

துரைமுருகனின் சொத்து மதிப்பு

  • அசையும் சொத்து மதிப்பு: இரண்டு கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ரூபாய்
  • அசையா சொத்துகளின் மதிப்பு: ஏழு கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்து 755 ரூபாய்
  • மொத்த மதிப்பு: ஒன்பது கோடியே 59 லட்சத்து 41 ஆயிரத்து 170 ரூபாய்

துரைமுருகன் மனைவி சொத்து மதிப்பு

அசையும் மற்றும் அசையா சொத்து மதிப்பு: 20 கோடியே இரண்டு லட்சத்து 50 ஆயிரத்து 712 ரூபாய்

கிரிமினல் வழக்குகள் நிலுவை

துரைமுருகன் மீது எட்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், ஆறு வழக்குகள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் ஆகியவை தொடர்பானதாகவும், லஞ்ச ஒழிப்பு காவல் துறையால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக இரண்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கடந்த தேர்தலின்போது சொத்து மதிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு காட்பாடி தொகுதியில் போட்டியிட்டபோது துரைமுருகன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரத்தின்படி, அவர் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி வசம் உள்ள அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பு மொத்தம் 29 கோடியே 78 லட்சத்து 80 ஆயிரத்து 701 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டில் துரைமுருகன் வசம் உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு 57 லட்சத்து எட்டாயிரத்து 425 ரூபாயாக இருந்தது. தற்போது, இரண்டு கோடியே 30 லட்சத்து 72 ஆயிரத்து 415 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமூகவலைதளங்களில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு பேஸ்புக், அவரது பெயரில் தனி இணையதளம், டிவிட்டர் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்களில் தனி முகவரி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: லண்டன் வீடு முதல் லெக்சஸ் கார் வரை... கமலின் சொத்துகள் விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.