ETV Bharat / state

அருண் மிஸ்ரா நியமனம்: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவு!

author img

By

Published : Jun 3, 2021, 1:58 PM IST

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவு என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், "தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் எதிர்ப்பைப் புறந்தள்ளிவிட்டு, அருண் மிஸ்ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நாளினை அந்த ஆணையத்திற்கு சவக்குழி வெட்டப்பட்ட நாளாகக் கருதுகிறேன்.

மோடி அரசுக்கு ஆதரவாகவுள்ளவர்

உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளில் அரசு சார்பாகத் தீர்ப்பளிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தவர் அருண் மிஸ்ரா.

வன உரிமைச் சட்டத்தை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின்போது வனப்பகுதியில் வாழும் ஏழை மக்களை வெளியேற்ற இவர் அளித்த உத்தரவு கடும் எதிர்ப்பைக் கிளப்பியது.

அமித் ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா சந்தேக மரணம் குறித்த வழக்கை இவரது தலைமையிலான அமர்வு விசாரிக்க அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நியமித்ததைக் கண்டித்து கடந்த ஜனவரி 2019இல் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரர், மதன் லோகூர், ஜோசப் குரியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எப்போதுமே மோடி அரசுக்கு ஆதரவாக அல்லது அதன் முக்கியத் தலைவர்களுக்கு ஆதரவாகவே அருண் மிஸ்ரா தீர்ப்பளித்துள்ளார். சஹாரா பிர்லா ஊழல் வழக்கு, சஞ்சீவ் பட் வழக்கு, ஹரன் பாண்டே வழக்கு, சிபிஐ உள் விவகார வழக்கு முதலியவை இந்த வழக்குகளில் அடங்கும்.

பாரிஸ் கோட்பாடுகளுக்கு முரணான நியமனம்

தேசிய மனித உரிமைகள் ஆணையங்களின் செயற்பாடுகள் குறித்து வகுத்துள்ள பாரிஸ் கோட்பாடுகளுக்கு முரணாக அருண் மிஸ்ராவின் நியமனம் அமைந்துள்ளது. இதுவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வுப் பெற்ற உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளே நியமனம்செய்யப்பட்டுள்ளார்கள்.

2019இல் மோடி அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி அல்லாத அருண் மிஸ்ரா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமனம்செய்யப்பட்டிருப்பது இவருக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

அருண் மிஸ்ராவைவிட அனுபவம்வாய்ந்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தற்போதைய உறுப்பினரான நீதியரசர் பி.சி. பந்த் ஏன் தலைவராக நியமிக்கப்படவில்லை? அல்லது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் பானுமதி, இந்து மல்கோத்ராவின் பெயர்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை?

தேசிய மனிதஉரிமை ஆணையத்திற்கு ‘ஏ’ தகுதி 2017 இல் வழங்கப்பட்ட போது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்வோம் என்று இந்தியாவின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

மோடிக்கு புகழாரம்!

ஜனவரி 2020 இல் 24 நாடுகள் பங்கு கொண்ட பன்னாட்டு நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நிலையில் உரையாற்றிய அருண் மிஸ்ரா பிரதமர் மோடி உலகம் போற்றும் தூரப்பார்வையுடைய ஆளுமை, துடிப்புமிக்க பேரறிவாளர், சர்வதேச அளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்துபவர் என்றும் புகழ்ந்தார்.

இந்த புகழ்மாலைக்காக மரபுகளை மீறி அரசு சார்பு ஒன்றை மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும் ஒருவருக்கு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி அளித்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் நலனை கவனத்தில் கொண்டு குடியரசு தலைவர் அருண் மிஸ்ராவை தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி: நீதிமன்றம் 'பளீச்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.