ETV Bharat / state

திமுகவினர் மீதான அண்ணாமலையின் புகார் - எந்த ஆதாரமும் இல்லை: நாராயணசாமி

author img

By

Published : Apr 24, 2023, 6:49 PM IST

திமுகவினர் மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரமும் இல்லை என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Narayana samy press meet
நாராயணசாமி பேட்டி

நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'புதுச்சேரியில் சாதி வாரியான கணக்கெடுப்பின் மூலம் கல்வி, அரசு வேலையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு, தலித் மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசை முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்த வேண்டும். முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த திட்டங்களில் 5% மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

புதுவையில் ஓய்வூதியம் பெற புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட முதியோருக்கு ஒரு மாதத்துக்குப் பிறகு ஓய்வூதியம் தரவில்லை. சுமார் 35 ஆயிரம் பேருக்கு 2 மாதங்களாக ஓய்வூதியம் தரவில்லை. முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த பல திட்டங்கள் செயல்படுத்தவில்லை. சிலிண்டருக்கு மானியமாக ரூ. 300 தரும் திட்டம், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 50,000 நிதி, ரொட்டி, பால் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ. 18,000 எனப் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

ரங்கசாமி அறிவித்த 95 சதவீத திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எந்த திட்டத்திலும் பலன் பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 தரும் திட்டம் அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. முதல் மாதம் மட்டும் தொகை தரப்பட்டது. ஆனால், அதற்கான கோப்பு 2வது மாத ஒப்புதலுக்கு தலைமைச்செயலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அந்த கோப்பினை தலைமைச் செயலர் நிராகரித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கான நிதியுதவி திட்டத்துக்கு எம்எல்ஏ கையொப்பம் இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆதாரம் இல்லாமல் தொகையைத் தர முடியுமா என்பது கேள்விக்குறிதான். பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத திட்டங்களை நிறைவேற்ற முடியாது. இதுதொடர்பான கோப்பினை அதிகாரிகள் திருப்பி அனுப்பினால் அதிகாரிகள் மீது முதலமைச்சர் பழி போடுவார்.

இதற்கான கபட நாடகத்தை முதலமைச்சர் ரங்கசாமி ஆடுகிறார். அவரது சாயம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். காரைக்கால் துறைமுகம் உட்பட புதுச்சேரி மக்களின் சொத்துகளை அதானி குழுமம் மூலம் அடைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி மவுனம் காப்பது சந்தேகம் அளிக்கிறது. அவரும் அதானி குழுமத்துடன் சேர்ந்து விட்டாரா?

புதுச்சேரியில் பணம் வாங்கி கொண்டு மதுக்கடைகளுக்கு ரங்கசாமி அனுமதி கொடுக்கிறார். ரெஸ்டோ பாரால், சட்டம் - ஒழுங்கு சீர் கெடுகிறது. அனைத்தையும் போலி சித்தரான ரங்கசாமி வேடிக்கைப் பார்க்கிறார். 'பீர் பஸ் ரங்கசாமி' என முதலமைச்சருக்கு மக்கள் பெயர் சூட்டியுள்ளனர். அவருக்கு விரைவில் பாடம் புகட்டப்படும்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார். இவ்விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அண்ணாமலைக்குப் பதில் கூறத் தேவையில்லை" என்றார்.

இதையும் படிங்க: Lingusamy: செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டணைக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.