ETV Bharat / state

'நீட் வேண்டாம்' - ராஜன் குழுவிற்கு அனிதாவின் தந்தை உருக்கமான கடிதம்

author img

By

Published : Jun 21, 2021, 6:50 AM IST

நீட் பாதிப்பு குறித்து ஆய்வுசெய்யும் ராஜன் குழுவிற்கு அனிதாவின் தந்தை சண்முகம் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அனிதா
அனிதா

நீட் தேர்வால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகளின் குடும்பத்தினர் neetimpact2021@gmail.com என்ற இமெயில் ஐடிக்கு இமெயில் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிதாவின் தந்தை கடிதம்

நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் 2017ஆம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை சண்முகம், ராஜன் குழுவிற்கு நீண்ட உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:

வணக்கம், என் பெயர் த. சண்முகம் (55). நான் தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் அருகே உள்ள குழுமூர் கிராமத்தில் நிரந்தரமாக வசித்துவருகிறேன்.

இன்றுவரை எங்கள் ஊருக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. நான் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவன். எனது 16 வயது முதற்கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்துவருகிறேன்.

எனக்கு 1988இல் திருமணமாகியது. பெண் குழந்தை வேண்டும் என்று தொடர்ச்சியாக நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. எங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்று கோயில்கள் தோறும் சென்று வரம் வாங்கி 2020 மார்ச் 5 அன்று அன்பு மகள் அனிதா பிறந்தார். 2000 ஆண்டு எண்ணிக்கையில் எல்லோர் வாழ்விலும் மறக்க முடியாத ஆண்டு. எனக்கும் மகள் பிறந்ததால் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

நானும் என் மனைவியும் மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது. நாங்கள் எவ்வளவு வறுமையில் இருந்தாலும், என் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்று நானும் என் மனைவியும் எங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் பிள்ளைகளின் கல்விக்காக மட்டுமே செலவழித்தோம். எங்கள் பிள்ளைகளும் வறுமையிலும் கல்வியை நிறுத்தாமல் தொடர்ந்து கற்றுவந்தனர்.

இந்த நிலையில் எனது மகள் அனிதா இரண்டாம் வகுப்பு படிக்கும்போது அவரது தாயார் (எனது மனைவி) இறந்துவிட்டார். நான் பிழைப்புத்தேடி திருச்சி காந்தி மார்க்கெட் சென்றுவிடுவதால் என் மகளும், நான்கு மகன்களும் எனது தாயின் (அவர்களின் பாட்டி) அரவணைப்பிலேயே கட்டி முடிக்கப்படாத வீட்டில் வசித்துவந்தார்கள். எனது நான்கு மகன்களையும் மூட்டை தூக்கித்தான் பட்டப்படிப்பு வரை படிக்கவைத்தேன்.

எனது மகள் அனிதா சிறுவயதிலிருந்து டாக்டருக்கு தான் படிப்பேன் என்று உறுதியுடன் படித்துவந்தார். பத்தாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த அனிதா வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 478/500 (தமிழ்-96, ஆங்கிலம்-83, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-99) மதிப்பெண்கள் பெற்றார்.

மறைந்த அனிதா
மறைந்த அனிதா

வீட்டில் கழிப்பிட வசதி இல்லாததாலும், வீட்டிலிருந்து படித்தால் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுமென்பதாலும் அவரின் மருத்துவக் கனவிற்கு தடையேதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எங்கள் வேளாண் நிலத்தை அடகுவைத்து, அருகே இருக்கும் கிராமத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் சலுகைக் கட்டணத்தில் சேர்த்தோம்.

அந்த இரண்டு ஆண்டுகளும் எந்தக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொள்ளாமல் தனது டாக்டர் கனவுக்காக முழுமூச்சுடன் படித்துவந்தார். பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1176/1200. (கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-199, உயிரியல்-194, தமிழ் -195, ஆங்கிலம்-188) மதிப்பெண்கள் பெற்றார். அவர் பெற்ற மதிப்பெண்கள் தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல் இரண்டு மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்குப் போதுமானது.

நானும் என் குடும்பமும் எப்படியும் என் மகள் அனிதா மருத்துவராகிவிடுவார் என்று நினைத்த வேளையில்தான், இந்திய ஒன்றிய அரசு "நீட்" தேர்வை தமிழ்நாட்டின் மீது திணித்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிறகு வந்தவர்கள் தமிழ்நாட்டின் கல்வி உரிமையைக் காக்கத் தவறிவிட்டார்கள்.

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகம் 2017 ஜூலை 12 அன்று அறிவித்த நீட்எதிர்ப்புப் போராட்டத்தில் 17 வயது மகள் அனிதா கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வேண்டி குடியரசுத் தலைவருக்கு அனிதா கடிதம் எழுதினார். அனிதாவின் நிலை குறித்து தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் முகநூல் பதிவின் மூலம், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ஊடகங்களும் அனிதா குறித்து பேசினார்கள்.

2017 ஜூலை 17 அன்று சென்னையில் ஊடகங்களைச் சந்தித்து, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசினார். பின்பு அப்போதைய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் சந்தித்து நேரிலும் முறையிட்டார். தமிழ்நாடு அரசும் நீட் தேர்வு குறித்து சரியான முடிவை அறிவிக்காமல் மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பு காரணமாக 2017ஆம் ஆண்டுக்கு மட்டும் நீட் விலக்கு தருவதாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்தது. அப்போது அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனும் இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நிச்சயம் நீட் விலக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். அவருக்கும் நன்றி தெரிவித்து மகள் அனிதா மின்னஞ்சல் அனுப்பினார்.

அனிதாவை அறிந்திருந்தும், நீட் ஆதரவாளர்கள் ஒரு கிராமப்புற ஏழை மாணவர் கூட நீட் தேர்வால் பாதிக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று பொய் கூறினார்கள். இதனைக்கண்டு சாதி, பாலினம், பொருளாதாரம், உளவியல், மொழி, சமூகம் என அனைத்து ரீதியாகவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த என் மகள் அனிதாவும், எங்கள் ஒட்டுமொத்தக் குடும்பமும் துடித்துப் போய்விட்டோம்.

இந்தியாவின் உச்சபட்ச நீதி வழங்கும் உச்ச நீதிமன்றத்திடம் என் மகள் அனிதா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி தன் நிலையைத் தெரிவிக்க 2017 ஆகஸ்ட் 17 அன்று டெல்லி சென்றார். தமிழ்நாட்டு அரசுக்கு ஆதரவாகத் தன்னையும் வழக்கில் இணைத்துக் கொண்டார். உச்ச நீதிமன்றம் இருதரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாதவாறு ஒரு முடிவை வரையறுத்து தருமாறு தமிழ்நாடு அரசிடம் அறிவுறுத்தியது.

நீட் நுழைவுத் தேர்வு
நீட் நுழைவுத் தேர்வு

'தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா'விற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. அட்டர்னி ஜெனரலும், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று முழு நம்பிக்கை அளித்திருந்தார். இரண்டில் எது நடந்தாலும் என் மகள் அனிதா மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துவிடும் என்று முழு நம்பிக்கையுடன் இந்திய ஒன்றியத்தின் தலைநகரிலிருந்து வீடு திரும்பினார். அப்படி நடந்திருந்தால் எங்கள் கிராமத்தின் முதல் மருத்துவராகியிருப்பார் அனிதா.

மருத்துவராகி விடலாம் என்று பெரும் நம்பிக்கையுடன் காத்திருந்த என் மகளின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தெறிந்தது இந்திய ஒன்றிய அரசு. தமிழ் நாட்டுக்கு ஓராண்டு விலக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியதால், உச்ச நீதிமன்றம் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என்று 2017 ஆகஸ்ட் 22 அன்று தீர்ப்பளித்தது.

17 வயது குழந்தை தெருவில் இறங்கிப் போராடி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து முறையிட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காமல் சோர்ந்துபோன எனது மகளிடம் டாக்டர் படிப்பு குறித்து மேலும் பேச மனமில்லை. அவரும் டாக்டர் படிப்பு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து பேசினால் குடும்பத்தினர் கவலை அடைவார்கள் என்று அமைதியானார். நாங்களும் புரிந்துகொண்டு, கால்நடை மருத்துவம் படிக்க மகளைத் தயார்படுத்தினோம். இத்தகைய சூழலில்தான் என் மகள் அனிதா, தனது மருத்துவராகும் கனவு நிறைவேறாத வேதனையில் 2017 செப்டம்பர் 1 அன்று தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

நீட் தேர்வால் என் மகளைப் போன்று பல அனிதாக்களின் கனவுகள் சிதைக்கப்பட்டு 13 பேர் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் பல குழந்தைகள் மருத்துவக் கனவு சிதைந்ததால், தங்களுக்கு விருப்பமில்லாத ஏதோ ஒரு படிப்பில் சேர்ந்து படிக்கின்றனர்.

ஒருவேளை சமமான வாய்ப்புகளும், போட்டியும், தேர்வு முறையும் இருந்திருந்து, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் அவர்களின் தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இருந்திருக்கும். நீட் தேர்வுக்கான போட்டியிலும், வாய்ப்பிலும் அனிதா போன்றவர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும் சூழலை நிச்சயம் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

உணவுக்கு ரேசன் கடைகளையே நம்பியிருக்கும் எங்களிடம் பல லட்சங்கள் செலவு செய்து நீட் கோச்சிங் செல்வதற்கு வசதியுமில்லை, படிப்பதற்கான வாய்ப்புகளும் எங்களுக்கு அருகில் இல்லை.

ஒருவேளை என் மகள் ஒரு ஆண்டு முன்கூட்டியே பிறந்திருந்தால் அவர் விரும்பிய டாக்டர் படிக்கும் வாய்ப்பை பிளஸ்டூ மதிப்பெண் அடிப்படையிலே பெற்றிருந்திருப்பார். அல்லது ஒரு ஆண்டு கடந்து பிறந்திருந்தால் அரசின் குழப்பத்திற்கு ஆளாகாமல் தனக்கு சம்பந்தமே இல்லாத நீட் தேர்வுக்கும் தயாராகி இருப்பார். எது எப்படியோ உயிரோடு இருந்திருப்பார்.

பிளஸ் டூவில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற அவரால் ஏன் நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லை என்று கேட்கும் நீட் ஆதரவாளர்களிடம் நான் கேட்கும் ஒரே கேள்வி நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஏன் +2வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்பதுதான்.

என் மகள் அனிதா படித்த பாடத்திட்டத்திலும், பயிற்சி பெற்ற தேர்வு முறையிலும் சாதித்துக் காட்டினார். ஆனால் "நீட்" எனும் பெயரில் அறிமுகமும், தொடர்பும் இல்லாத பாடத்திட்டமும், தேர்வு முறையும் திணிக்கப்பட்டதால் திக்குமுக்காடிப் போனார்.

12 ஆண்டுகள் மருத்துவக் கனவோடு படித்த படிப்பானது நீட் தேர்வால் பயனற்றதாகிவிட்டது. மாநில அரசு நடத்திய தேர்வெழுதி, அதற்கு மாநில அரசே வழங்கிய மதிப்பெண்களும் அர்த்தமற்றுப் போனதாலும் அனிதா உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். நீட் தேர்வு தொடரும் பட்சத்தில் அனிதாக்களுக்கான அநீதி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு
மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு

'2017 நீட் தேர்வில் பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழில் கேள்வித்தாள் கொடுத்தார்கள். தமிழ் மொழிபெயர்ப்பிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்.' இத்தனை தடைகளையும் தாண்டி நீட் தேர்வு எழுதச் செல்லும் நம் குழந்தைகளை உள்ளாடை முதற்கொண்டு கழட்டச் சொல்லி, பல தேவையற்ற கட்டுப்பாடுகள் விதித்து பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். இந்தியாவின் உயரிய தேர்வுக்குக்கூட இத்தனை கட்டுப்பாடுகள் கிடையாது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், போலி இருப்பிடச் சான்றிதழ் என பெரும் முறைகேடு நடைபெற்று, இன்றும் வழக்கு நடந்துவருகிறது.

நீட் ஆதரவாளர்கள் கூறும் முதன்மையான காரணம் "தகுதி"யின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பதுதான்.1200-க்கு 1176 மதிப்பெண் பெற்ற என் மகளுக்கு மருத்துவம் படிக்க "தகுதி" இல்லையென்று மறுத்து, நீட் தேர்வில் 720-க்கு 150 மதிப்பெண்ணுக்கு குறைவாக எடுத்திருந்தாலும், பணமிருந்தால் அவர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறுகிறார்.

அவர்கள் சொல்லும் தகுதி காற்றில் பறக்கிறது.

என் மகள் அனிதாவின் போராட்டங்கள் அனைத்தும் அவரைப் போன்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கானது. அதை உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே ஊடகங்கள் முன்பு தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அவரின் இறப்பிற்கு பிறகும் நீட் தேர்வால் 13 குழந்தைகள் இறந்துள்ளனர். மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப (கிராமப்புற மாணவர்களின் உள் இட ஒதுக்கீட்டோடு) இட ஒதுக்கீடு வழங்கினால் அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது அரசுப்பள்ளிகளும் மேம்படும்.

இது குறித்து மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், எங்களின் வழக்கறிஞருடன் நேரில் வந்து சமர்ப்பிப்பதற்கும் தயாராகவே இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த நீண்ட கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.