ETV Bharat / state

திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவுக்கும் உள்ளவேறுபாடு இதுதான் - அழுத்தி சொன்ன அன்புமணி

author img

By

Published : Jul 16, 2023, 7:34 PM IST

திராவிடக் கட்சிகள் அடுத்த ஆட்சிக்கான திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். ஆனால், பாமகவிற்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால் நாங்கள் கொண்டு வரும் திட்டங்கள் தமிழக மக்களின் அடுத்த தலைமுறைக்கானதாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அன்புமணி ராமதாஸ் பேட்டி

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னை தரமணி சந்திப்பில் பா.ம.க. கொடியை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "மதுவிலக்கு, நீர் மேலாண்மை, காலநிலை பருவநிலை மாற்றம், புகையிலைத் தடுப்பு, ஆன்லைன் சூதாட்டம் தடை இதுபோன்ற பிரச்னைகள் குறித்து பேசினாலே பாட்டாளி மக்கள் கட்சி தான் மக்கள் நினைவிற்கு வரும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கான சேவைகளை செய்துவருகிறோம். முதலமைச்சர் பதவியில் எல்லாம் ஆசை இல்லை. ஆட்சியில் இருந்துகொண்டு சாதனைகளை செய்தது ஒன்றும் பெரிதல்ல, எதிர்க்கட்சியாக இருக்கும் போதே செய்யும் சாதனைகள் தான் உண்மையான சாதனை. ஆகவே, தமிழக மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தருவார்கள்.

50 ஆண்டுகள் இந்த இரு கட்சிகளும் ஆட்சி செய்து தமிழ்நாட்டிற்கு உண்மையான வளர்ச்சி கிடைக்கவில்லை. இன்று தக்காளியின் விலை உயர்வால் இடைத்தரகர்கள் தான் சம்பாதிக்கின்றனர். ஆகவே, குளிர்பதனக் கிடங்குகள் அமைத்து காய்கறிகளின் விலை குறைவாக உள்ள சமயத்தில் அவற்றை அந்த கிடங்குகளில் பாதுகாப்பாக வைத்து விலை உயரும் சமயத்தில் மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. இதனை செய்யத்தவறியுள்ளது திராவிட ஆட்சி" எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 50 ஆண்டுகள் கால ஆட்சியில் இருந்த திராவிட காட்சிகள் நீர் நிலை மேலாண்மைக்காக எந்த ஒரு நிதியினையும் ஒதுக்கவில்லை. ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நீர் நிலை மேலாண்மைக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீர்நிலை மேலாண்மைக்காக தமிழக அரசு 8000 கோடி ஒதுக்கியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று நிதியின் பட்டியலை சுட்டிக்காட்டினார். மேலும், தடுப்பணைகள் கட்டச் சொன்னால் மணல் எடுக்க அனுமதி வழங்குகிறார்கள். இது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்" என விமர்சித்தார்.

இதனை அடுத்து, "திராவிடக் கட்சிகள் அடுத்த ஆட்சிக்கான திட்டங்களைக் கொண்டு வருகின்றனர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்தால், நாங்கள் கொண்டு வரும் திட்டங்கள் தமிழக மக்களின் அடுத்த தலைமுறைக்கானதாக இருக்கும். ஒருமுறை மட்டும் பாமக-விற்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: கருணாநிதிக்கு சொந்த செலவில் நினைவுச் சின்னங்கள் வைத்துக்கொள்ளட்டும் - ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.