ETV Bharat / state

கற்பித்தல் - கற்றல் சுதந்திரத்தை பறிக்கிறதா எமிஸ் வழிமுறை? எமிஸ் நடைமுறையை தடை செய்ய கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2023, 10:56 AM IST

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் - கற்றல் சுதந்திரத்தை பறிக்கும் எமிஸ் (EMIS) நடைமுறையை தடை செய்ய வேண்டும் என அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

ban on EMIS
எமிஸ் நடைமுறையை தடை செய்க

சென்னை: அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி வெளியிட்ட அறிக்கையில்,"மாணவர் கற்றலில் கொரோனா கால இடைவெளியை நிரப்பக் கொண்டு வந்த ‘எண்ணும் எழுத்தும் திட்டத்தால்’ ஆசிரியர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை செய்ய விடாமல் தமழ்நாடு அரசு கல்வித்துறை சார்பில் எமிஸ் (EMIS) செயலியை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இதில் கல்வி மற்றும் மாணவர்கள் சார்ந்த பல பதிவேற்றங்களை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இதனால் தங்கள் 99% நேரத்தை ஆசிரியர்கள் அலைபேசிகளுடனும், எமிஸ் செயலியை பயன்படுத்துவதிலும் கழிக்க வேண்டிய நிலையால், மாணவர்களுடன் கலந்துரையாட ஆசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது எதிர்கால சமுதாயத்தைக் கட்டமைக்கும் இன்றைய குழந்தைகளின் மனநலத்திற்கு ஏற்றதல்ல.

வகுப்பறைகளில் மாணவர்களுடன் உரையாடி அன்பு செலுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டு நல்லதொரு கல்வியை வழங்க வேண்டிய ஆசிரியர்களை அதன் எதிர் திசையில் பயணிக்கத் தூண்டுகிறது கல்வித்துறை. இதனால் தங்கள் வசம் உள்ள மாணவர் நலன் குறித்து எந்த அக்கறையும் காட்ட இயலவில்லை என்று மனம் வெதும்புகிறார்கள் ஆசிரியர்கள்.

இந்த எமிஸ் நடைமுறையால் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஆசிரியை திருமதி அன்னாள் ஜெயமேரி அவர்கள் இணையவழியில் பதிவேற்றம் செய்வதில் இருந்த சிக்கலால் ஏற்பட்ட மன உளைச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்த நிர்ப்பந்திக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டக் கற்பித்தல் அரும்பு, மொட்டு, மலர் என்ற வகைகளில் கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து குழந்தைகளது திறனை சோதிக்க வலியுறுத்தி கட்டாயப்படுத்துகிறது. இதற்கு எமிஸ் (EMIS) செயலி பயன்படுத்த வேண்டும் என்று ஆணையிடுகின்றனர் கல்வி துறையின் இந்த நடைமுறைகள் யாவும் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமாகும்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக வினாத்தாள் பதிவிறக்கம் செய்து மதிப்பிட வேண்டும் என்று வழிகாட்டுகிறது. அதையும் மதிப்பீடு செய்து மீண்டும் எமிஸ் வழியாக பதிவிடவும் வலியுறுத்துகிறது. நேரமின்மையால் எல்லாக் குழந்தைகளுக்கும் ஆன்லைன் வழியாக இத்தேர்வை நடத்த இயலவில்லை பெற்றோர்கள் ஆன்லைன் தேர்வு முறையை எதிர்த்து போராட்டத்தை முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது.

ஏற்கனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கின்ற நிலையில் வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேர்வு முறைகளை இணையவழியில் நடத்தியே தீர்வோம் என்று கட்டாயப்படுத்துவது முறையற்றது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பங்கும் பகுதியுமான இந்த இணையவழிக் கல்வி மற்றும் தேர்வு முறையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி (AISEC) கேட்கிறது.

மேலும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை ஏராளமாகக் கொடுத்து வருவதை அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது. வருங்கால சமூகம் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் நேரடியாக கற்பித்தல் - கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் எனவும், தேர்வுகளும் நேரடியாக நடத்தப்பட வேண்டும்.

மேலும், ஆசிரியர் கற்பித்தல் பணியை சுதந்திரமாக செய்ய விடவேண்டும் என்றும் எமிஸ் நடைமுறையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டுமெனவும் அரசாங்கத்தையும் கல்வித் துறையையும் கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசாங்கம் இந்த இணைய வழி தேர்வு முறையை திரும்பப்பெறுவதோடு எமிஸ் நடைமுறைக்கு நிரந்தர தடை விதிக்கக்கோரி ஆசிரியர் சங்கங்களும், பெற்றோர்களும், பொது மக்களும் போராட முன்வருமாறு ஏஐஎஸ்இசி அறைகூவி அழைக்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் அரங்கேறி இருப்பது உண்மைதான் - நாராயணன் திருப்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.