ETV Bharat / state

மின் கட்டண உயர்வை எதிர்த்து அகில இந்திய மின்சாரம் நுகர்வோர் சங்கம் கண்டனம்

author img

By

Published : Dec 10, 2021, 6:01 PM IST

மின்வாரியத்தின் கடனிலிருந்து மீள, மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின் வாரியத்தை அறிவுறுதத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அகில இந்திய மின்சாரம் நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) தெரிவித்துள்ளது.

மின் கட்டண உயர்வை எதிர்த்து அகில இந்திய மின்சாரம் நுகர்வோர் சங்கம் கண்டனம்..!
மின் கட்டண உயர்வை எதிர்த்து அகில இந்திய மின்சாரம் நுகர்வோர் சங்கம் கண்டனம்..!

சென்னை: மின் வாரியத்தின் கடன் சுமையிலிருந்து மீளுவதற்காக மின் கட்டணத்தை உயர்த்துமாறு, தமிழ்நாடு அரசு மின் வாரியத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைக் கண்டித்த அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் (தமிழ்நாடு) செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல், வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு - பல்வேறு பிரச்சினைகளால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டு மக்கள் மீது மின் கட்டணத்தை உயர்த்தி, மேலும் அவதிக்குள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அறிவித்தனர்.

மின் வாரிய கடனுக்கு மக்கள் பொறுப்பல்ல

மேலும், ”மின் வாரியத்தின் கடனை மக்கள் மீது சுமத்துவது எப்படி நியாயமாகும்? மின் வாரியம் கடன் சுமையில் இருப்பது உண்மை என்றாலும் அதற்கு மக்கள் பொறுப்பல்ல. மின்சாரமும், நிலக்கரியும் தனியாரிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல்செய்வது, பராமரிப்பதில் நிர்வாகச் சீர்கேடு போன்ற பல்வேறு அம்சங்களில் நிலவும் கேடுகெட்ட ஊழல் போன்றவையே காரணங்களாகும்.

சங்கப் பிரதிநிதிகள், தனியார் மைய நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவது குறித்தும், வாரியத்தில் நிலவும் ஊழல்களைக் களைவது போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கி மின் வாரியத்தை கடனிலிருந்து மீட்க வேண்டும்.

அதை விடுத்து, மக்கள் மீது மின் கட்டணத்தை உயர்த்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் தன் அறிவுறுத்தலை, மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். மேலும், மின் மசோதா 2021ஐ திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசையும், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என மாநில அரசையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பொதுமக்களும் எங்கள் சங்கத்துடன் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று செய்திக் குறிப்பில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.