ETV Bharat / state

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் அதிரடி

author img

By

Published : Sep 27, 2021, 5:29 PM IST

கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில், “கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன.

13-9-2021 அன்று காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், “நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ எனவும் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும் என மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (27-9-2021) ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிங்க:போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.