ETV Bharat / state

"மிக்ஜாம் புயலே: திமுகவிற்கு எமன்.. 2026இல் திமுக குளோஸ்" - அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 9:55 PM IST

Updated : Dec 14, 2023, 10:11 PM IST

ADMK Ex Minister Jayakumar press meet: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மிக்ஜாம் புயலே திமுகவிற்கு எமனாக மாறும் எனவும், வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக குளோஸ் ஆகிவிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

jeyakumar press meet
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"மிக்ஜாம் புயலே: திமுகவிற்கு எமன்.. 2026இல் திமுக குளோஸ்" - அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வரும் டிச.24ஆம் தேதியன்று மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்-இன் நினைவு நாளினை முன்னிட்டு, அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மலர் தூவி அஞ்சலி செலுத்த இருப்பதால், காவல்துறையினர் பாதுகாப்பும், அனுமதியும் வழங்கக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பெருநகர காவல் ஆணையரைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுகவை 13 ஆண்டுகள் வன வாசத்திற்கு அனுப்பிய பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்-இன் நினைவு நாள் அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அதற்குரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம்.

மிக்ஜாம் புயலின் தாக்கத்தின் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிப்படைந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், ஒரு தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு அரசின் வரிப்பணம் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது அதை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இதைப்பார்க்கும் போது, ரோம் நகரும் தீ பற்றி எரியும் பொழுது அரசன் பிடில்(Fiddle) வாசித்துக் கொண்டிருந்தது போல், தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்து பசி, பட்டினியோடு இருக்கின்ற போது ஃபார்முலா கார் பந்தயத்திற்காக இதுவரை ரூ.22 கோடி அளவில் செலவு செய்து உள்ளது திமுக அரசு.

இந்தப் பணத்தை ஸ்டாலினோ, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினோ அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து தருவார்களா? மக்களின் வரிப்பணம் ரூ.22 கோடி வீணடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணத் தொகை தரும் எனக் கூறியது.

ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரிக் கட்டுபவர்களுக்கு நிவாரணத் தொகை இல்லை என தெரிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களிலோ, அரசுப் பதவிகளிலோ சிறிய அளவில் பணிபுரியும் நபர்களும் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அவர்கள் வருமானவரிக் கட்டுவதால் இந்த நிவாரணத் தொகை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு வைத்திருந்த அனைவருக்கும் நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது, திமுக பாதிக்கப்பட்ட மக்கள் கொடுக்கும் மனுக்களைப் பரிசீலனைச் செய்து நிவாரணம் கொடுக்கும் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட குற்றங்கள் நடக்கிறது. அதனைப் புலனாய்வு செய்வதற்கு வக்கு இல்லை. ரூ.6000 கொடுப்பதற்கு ஆயிரம் கண்டிசன்களை திமுக அரசு கொண்டு வருகிறது. மக்களை ஏமாற்றும் ஒரே விஷயத்தை ஆதி காலத்திலிருந்து திமுக செய்து வருகிறது. தேர்தல் காலத்தில் சொல்வது எதுவும் நிறைவேற்றுவதில்லை.

கொசத்தலை ஆறு முழுவதும் எண்ணெய் நிரம்பி உள்ளது. இதனால் அங்குள்ள 6 கிராம் பாதிப்படைந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவு மரக்காணம் கடற்கரை வரை சென்றுள்ளது. இதனால் மீனவர் சங்கங்கள் மூலமாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அதைப்பற்றி தமிழக அரசு இன்னும் வாய் திறக்காமல் உள்ளது.

மார்டன் டெக்னாலஜி இருக்கும் காலத்தில் வாலியை வைத்து எண்ணெய்யை எடுக்கின்றார்கள் என்றால், எவ்வளவு கேவலமான அரசு என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். நான்கு மாவட்ட மக்களுக்குப் பட்டை போட்டு ஏமாற்றி உள்ளது தமிழக அரசு.

பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படத் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பாதிப்புகளைக் கேட்டறியாமல் தமிழக அரசு காட்டும் புகைப்படங்களைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகிறார்கள். இதனால், பாஜகவுடன் தமிழக அரசு ரகசிய உறவு வைத்திருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள்.

மத்திய அரசு ஒரு பக்கம் இழப்பீடு தொகை கொடுத்தாலும், மாநில அரசுக் கருவூலத்திலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். அரசு தன் கடமையைத் தட்டிக் கழிக்காமல் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

பேரிடர் காலத்தில் எப்படிப் பணி செய்ய வேண்டும் என்பதை அதிமுகவிடம் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பேரிடர் காலத்தில் எப்படிப் பணி செய்ய வேண்டும் என திமுகவிற்குப் பாடம் எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மிக்ஜாம் புயலே திமுகவிற்கு எமனாக மாறும். வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு குளோஸ் ஆகிவிடும். திமுக எல்கேஜி ஆக இருக்கிற சூழ்நிலையில், மாஸ்டராக இருக்கக்கூடிய அதிமுகவைத் தான் அனைவரும் விரும்புவார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ப்ரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளரின் மனைவி திருச்சியில் கைது!

Last Updated : Dec 14, 2023, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.