ETV Bharat / state

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி பதவியேற்பு!

author img

By

Published : Feb 7, 2023, 11:02 AM IST

Updated : Feb 7, 2023, 11:20 AM IST

வழக்கறிஞர் விக்டோரியா கெளரி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

விக்டோரியா கெளரி கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார்!
விக்டோரியா கெளரி கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்றார்!

சென்னை: கடந்த ஜனவரி 17ஆம் தேதி கூடிய உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதன்படி பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி மற்றும் கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளையும், வெங்கடாச்சாரி லஷ்மி நாராயணன், லக்‌ஷ்மண சந்திர விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமசாமி நீலகண்டன் மற்றும் கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன் ஆகிய 5 வழக்கறிஞர்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.

இவர்களில் வழக்கறிஞர் லக்‌ஷ்மண சந்திர விக்டோரியா கெளரி, சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட்டவர் என்றும், இதனால் அவரால் எப்படி நடுநிலையான தீர்ப்பை வழங்க முடியும் என்றும், அவர் அரசியல் பின்புலம் உடையவர் என்றும், கொலிஜியம் தனது பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவரை நீதிபதியாக நியமிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வருகிற 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதனிடையே நேற்று (பிப்.6) வழக்கறிஞர்களான விக்டோரியா கெளரி, பாலாஜி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி மற்றும் திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

மேலும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (பிப்.7) பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருந்தார். எனவே இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் வழக்கறிஞா் ராஜு ராமச்சந்திரன் தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள் அமா்வு, இன்று( பிப்.7) விசாரணைக்கு பட்டியலிட்டனர். இந்த நிலையில் இன்று காலை 9.15 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த மனு குறித்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீரென பட்டியலிடப்பட்ட வழக்கு என்பதால் நீதிபதிகள் விசாரணைக்கு வரவில்லை.

எனவே இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் 7வது அறை எண்ணுக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 10.30க்கு தொடங்கிய இந்த மனு மீதான விசாரணையில், காரசார விவாதங்கள் வைக்கப்பட்டது.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் மூத்த வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த எதிர்மனு, உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: சிறுபான்மையினர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்த விக்டோரியா கெளரி உட்பட ஐவர் நீதிபதிகளாக நியமனம்

Last Updated : Feb 7, 2023, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.