ETV Bharat / state

சொத்து வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் - ஈபிஎஸ் அறிவிப்பு

author img

By

Published : Dec 2, 2022, 5:40 PM IST

சொத்து வரி, மின் கட்டண உயர்வைக் கண்டித்து டிச.9, 13, 14 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசு, கடந்த 18 மாதங்களில், தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் 150 சதவீதம் வரையிலான சொத்து வரியை உயர்த்தியுள்ளது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், மின் கட்டணத்தை வரலாறு காணாத அளவில் அரசு உயர்த்தியுள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, சமூக விரோதிகளின் ஊடுருல், போதைப்பொருட்கள் புழக்கம், திமுக ரவுடிகளின் அராஜகங்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

மக்கள் மிகுந்த வேதனையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். திமுக அரசின் இச்செயல் மிகுந்த வேதனைக்குரியது. இவ்வாறாக, திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்கள் மட்டுமே தொடர்ந்து நடந்து வருவதை கண்டிக்கிறோம்.

மேலும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை மாவட்டக் கழகங்களோடு இணைந்து, சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி கழகச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 9ஆம் தேதி பேரூராட்சிகளிலும், டிசம்பர் 13ஆம் தேதி நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், டிசம்பர் 14ஆம் தேதி ஊராட்சி ஒன்றியங்களிலும் போராட்டம் நடத்த உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஈ.பி.எஸ். குறித்து கருத்து வெளியிட அறப்போர் இயக்கத்திற்கு இடைக்காலத்தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.