ETV Bharat / state

'தமிழர்கள் தன்னுரிமைக் கழகம்' என்ற புதிய கட்சி தொடங்கிய பழ.கருப்பையா!

author img

By

Published : Jan 7, 2023, 9:09 PM IST

Updated : Jan 7, 2023, 9:44 PM IST

நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பழ.கருப்பையா 'தமிழர்கள் தன்னுரிமைக் கழகம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

பழ கருப்பையா
பழ கருப்பையா

சென்னை: மூத்த அரசியல் தலைவர் பழ கருப்பையா 'தமிழர்கள் தன்னுரிமைக் கழகம்' என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கியுள்ளார். இவர் காங்கிரஸ், மதிமுக என பல கட்சிகளில் பயணம் செய்துவிட்டு, 2010ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி 2019ஆம் ஆண்டு வரை திமுகவில் பயணித்தார். இறுதியாக 2021ஆம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். சிறிது காலம் எந்த ஒரு கருத்தையும் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகி 'தமிழர்கள் தன்னுரிமைக் கழகம்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

புதிய இயக்கம் தொடங்குவது குறித்து பழ.கருப்பையா யூடியூபில் வெளியிட்ட வீடியோவில், "அண்ணாமலையினாலும், ஆளுநர் ஆர்.என்.ரவியினாலும் திராவிடத்தை அழிக்க முடியாது. ஆனால் இவர்களின் ஊழல் ஆட்சி திராவிடத்தோடு இணைக்கப்பட்டு திராவிடம் அழிந்து விடுமோ, அது மு.க.ஸ்டாலின் காலத்தில் நிறைவேறி விடுமோ என்ற கவலை இருக்கிறது. திராவிடத்தைக் காக்க, தமிழரைக் காக்க, தமிழர் நலனைக் காக்க, சுரண்டலற்ற சமுதாயத்தை உருவாக்கச் சேர்ந்து செயல்படுவோம் வாருங்கள். ஊழலில் பங்கு பெறுவது தான் கட்சி விசுவாசம் என்கிறார்கள். கட்சி விசுவாசம் என்பது தலைமை விசுவாசமாக, தலைமை விசுவாசம் என்பது பாரம்பரிய விசுவாசமாக ஆகிறது.

பாதையில் நடுவே ஒரு பெரிய பாறை இருக்கிறது அதை அப்புறப்படுத்த வேண்டாமா?. யாராவது ஒருவர் முதல் நபராக வந்தால் தானே அந்த காரியம் நடக்கும். பின்னால் யார் யார் வருகிறார்கள் என்று காத்துக் கொண்டிருப்பதை விட முதல் அடியாக நாம் தொடங்குவோம் என்ற நிலைப்பாடு தான் பாரையை அப்புறப்படுத்த உதவும். எளிமை, நேர்மை, செம்மை என்ற அடிப்படையில் செயல்படுவோம் வாருங்கள். அரசியலை அறவழிப்படுத்துவோம் வாருங்கள். சந்தைப்படுத்தப்பட்ட அரசியலை சமூக மையப்படுத்துவோம் வாருங்கள். இதையெல்லாம் செய்வதற்கு 12 கட்சிகள் இருக்கின்றனர். ஆனால் அவையெல்லாம் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கூட்டுறவு தேர்தல் வரை தொடர்கின்றனர்.

தேர்தல் அரசியலுக்காகத் தலைமை கட்சியின் கொத்தடிமைகளாகக் கூட்டணிக் கட்சிகள் ஆகி விடுகின்றனர். இதனால் ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி ஒரு நெருக்கடியைத் தர முடியவில்லை. கூட்டணிக் கட்சிகள் தலைமை கட்சியின் கிளை கட்சிகளாக மாறி அவல நிலை தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அரசியலை அறவழியில் மாற்றுவதற்கு இங்கு ஒரு முயற்சி தேவையாக இருக்கிறது. வகுப்புவாத கட்சியான பாஜக போன்ற கட்சியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தவும், மனிதர்களை மதங்களின் பெயரால் பிளவுபடுத்தி அவர்களின் உரிமைகளைச் சட்டங்களின் வழியாகப் பறித்து, காஷ்மீர் போன்ற மாநிலங்களைத் துண்டு துண்டாக்கி மோசமான நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பண மதிப்பு இழப்பு போன்ற வளர்ச்சியைக் குறைத்த போக்கிற்கும், விவசாய சட்டம் என்ற பெயரில் குளறுபடியான மூன்று சட்டங்களை இயற்றி, பின்னர் தான் துப்பியதை தானே விழுங்குகின்ற அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக வாருங்கள். ஊழல் தான் திராவிடத்தின் மையக்கூறு என்பதை மாற்றுவதற்கு வாருங்கள். எந்த ஒரு மாற்றமும் முதல் புள்ளியிலிருந்து தான் தொடரும். தமிழர்கள் தன்னுரிமை கழகம் உங்களை அழைக்கிறது" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Men's Only ஆண்கள் மட்டுமே பங்கேற்ற மணக்கும் மதுரை கறி விருந்து!

Last Updated : Jan 7, 2023, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.