ETV Bharat / state

"பேருந்துகளை இயக்க விடாமல் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 9, 2024, 4:59 PM IST

Tamil Nadu Bus Strike: போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

action-will-be-taken-against-those-who-stop-the-bus-halfway-says-minister-sivasankar
"பேருந்துகளை இயக்க விடாமல் இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை..

"பேருந்தை பாதியில் நிறுத்தி இடைஞ்சல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் சிவசங்கர்!

சென்னை: ஊதிய உயர்வு, அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று (ஜனவரி 9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இன்று 95 சதவீத பேருந்துகள் இயங்குகிறது. குறிப்பாக அரசு விரைவு பேருந்து (SETC) 100 சதவீதம் இயங்குகிறது. கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் இயங்குகின்றன. எனவே, பொங்கல் பண்டிகைக்கு முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அடுத்தடுத்த நாட்களில் முன்பதிவு செய்ய இருக்கின்றவர்கள் என அனைவரும் அச்சமின்றி சொந்த ஊருக்குச் செல்ல அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் செயல்படும்.

அதே போல், சென்னை மாநகர பேருந்துகள் காலையில் 96 சதவீதம் இயங்கியது, படிப்படியாக தற்போது 100 சதவீத பேருந்துகளும் இயங்குகின்றன. ஆகையால், மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி போக்குவரத்துக் கழகம் சிறப்பாகச் செயல்படும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்திய கோரிக்கைகளை, இன்றைக்கு இருக்கின்ற பொருளாதார சூழலில் நிறைவேற்றுவது என்பது சிரமம். அரசுக்கான நிதி நிலைமைகள் சரியான பின்பு அவர்களது கோரிக்கைகளைச் செயல்படுத்துவோம்.

தொடர்ந்து, வழக்கமாக இது போன்ற வேலை நிறுத்தம் என்றால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்கள் ஒரு புறம். இடைஞ்சலாக இருப்பவர்கள் ஒரு புறம், அறிவிக்கப்பட்ட பேருந்துகள் முறையாக இயக்காமல் பாதி வழியில் நிறுத்தி விட்டுச் செல்வார்கள். அவ்வாறு இடைஞ்சலாக அரசுப் பணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் போராட்டம் செய்பவர்களைத் தவறு சொல்லவில்லை. அது அவர்களது உரிமை. தொழிற்சங்கம் என்றால் தொழிலாளர்களின் கோரிக்கையை முன்வைத்துப் போராடுவது அவர்களுடைய மரபு" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழுமையாக இயக்கம்.. ஆய்வுக்குப் பின் அமைச்சர் சிவசங்கர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.