ETV Bharat / state

பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.. திருமாவளவன் கோரிக்கை

author img

By

Published : Aug 30, 2022, 9:35 PM IST

பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

திருமாவளவன் கோரிக்கை
திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டில் 123 பட்டியலின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர், பட்டியலின சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களில் இந்தியாவிலேயே 5 ஆவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. 2021 ஆம் ஆண்டிலும் 123 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அதில் 89 பேர் சிறுமியர் என்றும் என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது. எனவே பட்டியலினத்தவர் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக்கூடாது. முதலமைச்சர் உறுதியோடு அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் நடந்திருந்தன. 2020ஆம் ஆண்டில் 1274 வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ்ந்தன. 2021 இல் பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்களின் எண்ணிக்கை 1377 ஆக உயர்ந்திருக்கிறது.

2021 இல் தமிழ்நாட்டில் 53 பட்டியலினத்தவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 61 பட்டியலினத்தவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் பட்டியலின படுகொலைகளில் 2020 ஆம் ஆண்டு 5 ஆவது இடத்தை வகித்த தமிழ்நாடு இப்போது 7 ஆவது இடத்தில் இருக்கிறது.

பட்டியலின பெண்கள் மீதான தாக்குதலில் துன்புறுத்துவது, கண்ணியக் குறைவாக நடத்துவது போன்ற குற்றங்களைவிடவும் பட்டியலின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவது தமிழ்நாட்டில் மிக அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டில் 123 பட்டியலின பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்தது. அதில் 88 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுமியர். தலித் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்களில் இந்தியாவிலேயே 5 ஆவது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. 2021 ஆம் ஆண்டிலும் 123 பேர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அதில் 89 பேர் சிறுமியர் என்றும் என்சிஆர்பி அறிக்கை தெரிவிக்கிறது.

பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதில் தமிழ்நாடு காவல்துறை மெத்தனமாக இருப்பது என்சிஆர்பி அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2020 இல் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டின் இறுதிவரை புலன் விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694 எனத் தெரிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் இறுதியிலோ 825 வழக்குகள் புலன்விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2020 ஆம் ஆண்டைவிட 2021 ஆம் ஆண்டில் கூடுதலான வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் உள்ளன.

பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 40% வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக என்சிஆர்பி அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், 186 வழக்குகள் தவறான தகவல், போதுமான ஆதாரம் திரட்டமுடியவில்லை எனக் காரணம் காட்டி காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரியவந்துள்ளது.

காவல்துறையின் மெத்தனமான போக்கே வன்கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்பதை என்சிஆர்பி அறிக்கை புலப்படுத்துகிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளே இல்லாத மாநிலம் என்ற பெருமையைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CUET Exam: லட்சத்தீவில் தேர்வு மையம்... சு.வெங்கடேசன் முயற்சியால் மதுரையில் தேர்வெழுதிய மாணவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.