ETV Bharat / state

ஐசிஎப் முன்னாள் தலைமை பொறியாளரிடம் இருந்து மேலும் ரூ. 4.28 கோடி பறிமுதல்

author img

By

Published : Jul 6, 2021, 9:17 PM IST

ஐசிஎப் தொழிற்சாலையில் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளராகப் பணியாற்றிய காத்பாலிடம் இருந்து மேலும் 4.28 கோடி ரூபாய் வைப்புத் தொகையும், சொத்து ஆவணங்களையும் சிபிஐ பறிமுதல் செய்துள்ளது.

ஐ.சி.எப் தொழிற்சாலை முன்னாள் தலைமை பொறியாளர்
ஐ.சி.எப் தொழிற்சாலை முன்னாள் தலைமை பொறியாளர்

சென்னை: ஐசிஎப்பின் முன்னாள் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் காத்பால், 50 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சிபிஐ கையும் களவுமாக பிடித்து நேற்று (ஜூலை.05) கைது செய்தது.

லஞ்சப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய உதவிய பெண் தொழில் அதிபர் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இயங்கும் யுனிவர்சல் இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனத்தின் இயக்குனர் அம்சா வேணுகோபால், ஐசிஎப் பின் தலைமை மெக்கானிக்கல் பொறியாளராக காத்பால் இருக்கும் போது, டெண்டர் விவகாரத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

காத்பால் தலைமை மெக்கானிக்கல் பொறியாளராகப் பணியாற்றிய போது, பெண் தொழிலதிபர் அம்சா வேணுகோபாலுக்குச் சாதகமாக இருந்ததற்காக 5.89 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் வாங்கியதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.

ஐ.சி.எப் தொழிற்சாலை முன்னாள் தலைமை பொறியாளர்
ஐ.சி.எப் தொழிற்சாலை முன்னாள் தலைமை பொறியாளர்

ஓய்வுக்கு பின் லஞ்சம்

பணியில் இருந்தபோது லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டால் மாட்டிக் கொள்வோம் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்றபின் தவணை முறையில் பெறுவதற்காக காத்பால் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற காத்பால், தனக்கான லஞ்சப் பணம் அனைத்தையும் தவணை முறையில் கொடுக்குமாறு, பெண் தொழில் அதிபர் அம்சா வேணுகோபாலிடம் தெரிவித்துள்ளார்.

தவணை முறையில் லஞ்சம்

அம்சா வேணுகோபால், தனது தொழில் பங்குதாரரான டெல்லியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவர் மூலம், டெல்லியில் உள்ள காத்பாலின் சகோதரரான சஞ்சய் காத்பாலிடம் பணத்தைச் சேர்க்கும் படி, டெல்லியில் உள்ள மற்றொரு தொழில் பங்குதாரரான கேட்மால் ஜெயின் என்பவர் மூலம் கொடுத்துள்ளார்.

இந்த பணப் பரிவர்த்தனையை அறிந்த சிபிஐ, லஞ்சப் பணம் கைமாற உதவிய பெண் தொழிலதிபர் அம்சா வேணுகோபால், ஓம் பிரகாஷ், கேட்மால் ஜெயின், காத்பாலின் சகோதரர் சஞ்சை காத்பால் ஆகியோரை கைது செய்து டெல்லி, சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடரும் விசாரணை

சிபிஐ
சிபிஐ

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை, டெல்லி உட்பட ஒன்பது இடங்களில் சிபிஐ முதல் நாள் நடத்திய சோதனையில், ரூ.2.75 கோடி பணமும் 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து இரண்டாவது நாள் நடத்தப்பட்ட சோதனையில் வைப்புத் தொகையாக 4.28 கோடி ரூபாய் பணமும் சொத்து ஆவணங்களும், இரண்டு வங்கி லாக்கர்களில் சாவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

வங்கி லாக்கர்களிலும் சொத்து ஆவணங்களின் மதிப்பை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக சிபிஐ கூறியுள்ளது. மேலும், இந்த டெண்டர் முறைகேட்டில் ஐசிஎப் சார்ந்த மற்ற அலுவலர்கள் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பும் பாஜக கல்யாணராமன் மீது விசிக புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.