ETV Bharat / state

சென்னையில் 438 கிலோ கஞ்சா பறிமுதல் - சினிமா பாணியில் கடத்தல் யுக்தி!

author img

By

Published : Feb 15, 2023, 10:31 PM IST

ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 438 கிலோ கஞ்சாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் 438 கிலோ கஞ்சா பறிமுதல்!
சென்னையில் 438 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னையில் 438 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்துவதை தடுக்க காவல்துறை மற்றும் மத்திய போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஆந்திராவிலிருந்து வேன் மற்றும் காரில் ஒரு கும்பல் பெருமளவு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் காரனோடை சுங்கச்சாவடி பகுதியில் அதிகாரிகள் வாகனத் தீவிர தணிக்கை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கிடமான வேன் மற்றும் கார் ஒன்று வந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த வேனை நிறுத்தி வழக்கமாக கஞ்சா மறைத்து கொண்டுவரப்படும் பகுதியில் சோதனை நடத்திய போது, கஞ்சா இல்லை. இதனால் ஏமாற்றமடைந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வேனில் தீவிர சோதனை நடத்திய போது, வாகனத்தின் மேல்தளத்தில் சந்தேகிக்கும் வகையில் அலுமினிய தகடு மூடப்பட்டிருந்தது.

உடனடியாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த அலுமினிய தகட்டினை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அங்கு ரகசிய அறை அமைக்கப்பட்டு 197 பாக்கெட்டுகளில் 438 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர், கஞ்சா கடத்திய வேனை பின் தொடர்ந்து வந்த காரிலிருந்த மூன்று பேரை பிடித்தனர்.

இதனையடுத்து 438 கிலோ கஞ்சாவை கடத்திய மூன்று பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஆந்திரா, ஜர்லா கிராமம் பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னையில் இடைத்தரகர் ஒருவரிடம் கைமாற்றி விட வந்திருப்பதும் தெரியவந்தது.

பழைய வாகனங்களை விற்கும் தொழில் செய்து வந்த இவர்களுக்கு பணத்தேவை ஏற்பட்டதால் கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். வாகன நுணுக்கம் குறித்து நன்கு அறிந்தவர்களான இவர்கள் வேனில் மேல்தளத்தில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தியதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீசார் வழக்கமாக டேஷ்போர்டு மற்றும் முன்பாகத்தில் மட்டுமே சோதனை செய்து விடுவார்கள் எனவும், மேல்தளத்தில் போலீசார் சோதனை செய்யமாட்டார்கள் என்பதால் மேல்தளம் அமைத்து கஞ்சா கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதே போல இரண்டு முறை வேனின் மேல்தளத்தில் கஞ்சா மறைத்து கொண்டு கைமாற்றி விட்டதாகவும், இந்த முறை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை யாரிடம் கைமாற்ற கொண்டு வந்தனர்? இடைத்தரகர் யார்? என்பது தொடர்பாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பொதுக்குழாயில் துணி துவைத்ததால் தகராறு; திமுக கவுன்சிலர் தாக்கியதால் ராணுவ வீரர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.