ETV Bharat / state

மேட்டூர் அணையில் குவிந்துள்ள பொருளாதார பொக்கிஷம்... அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 4:58 PM IST

Mettur dam: காவிரி நீரை மட்டும் எல்லா வருடமும் தமிழக அரசு நம்பி இருக்காமல் தமிழகத்தில் உள்ள வளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் எனவும், அதனை சரியான திட்டமிடலோடு செய்தால் தமிழக விவசாயிகளின் நலனை காக்க முடியும் என்கிறார் தமிழ்நாடு ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர் சங்க தலைவர் அ.வீரப்பன்.

30 TMC more water can be saved by silting in Mettur dam problem of not getting water from Cauvery can be avoided
மூத்த பொறியாளர் சங்க தலைவர் அ.வீரப்பன்

மேட்டூர் அணையில் குவிந்துள்ள பொருளாதார பொக்கிஷம்... அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா..?

சென்னை: எல்லா வருடமும் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தமிழக டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு கர்நாடகா வழங்குகின்ற காவிரி நீரை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதிலும் இந்த வருடம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைபடுத்தாமல் கர்நாடக அரசு குறைந்த அளவு டி.எம்.சி நீரை மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.

இதனால் குறுவை சாகுபடிக்கு சரியான நீர் கிடைக்காமல் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவினை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தமிழக அரசு.

இப்படி குறுவை சாகுபடிக்கும், சம்பா சாகுபடிக்கும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் இந்த பயிர்கள் சாகுபடியாகுமா? அல்லது சாகும்படி ஆகுமா என கேள்வி எழுந்துள்ளது. ஏன் எல்லா வருடமும் டெல்டா விவசாயிகளின் நலனை காக்க உச்ச நீதிமன்றத்தையும், கர்நாடக அரசையும் நாம் நாட வேண்டும் என்ற கேள்வியை ஓய்வு பெற்ற மூத்த பொறியாளர் அ.வீரப்பன் முன் வைக்கிறார்.

இது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திற்கு ஓய்வு பெற்ற மூத்த பெறியாளர் அ.வீரப்பன் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள ஆங்கிலேய காலத்து அணையான மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 90.3 டி.எம்.சி. ஆனால் வருடா வருடம் மேட்டூர் அணையில் குவிந்து வரும் வண்டல் மண்ணால் தற்போது அங்கு 60.3 டி.எம்.சி நீரை மட்டுமே அணையில் சேகரிக்க முடிகிறது.

இதில் முறையாக அணையினை தூர்வாரினால் தமிழகத்தில் டெல்டா விவசாயிகளுக்கு ஆகஸ்ட் மாதங்களில் வழங்கப்படும் நீரில் ஒரு பங்கு நாமே தந்துவிட முடியும். இதிலும் தமிழகத்தில் மீதமுள்ள எல்லா அணைகளையும் முறையாக பராமரித்து தூர்வாரி வைத்திருந்தால் காவிரி நீரை நாம் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை” எனவும் அவர் கூறுகிறார்.

மேலும், “மேட்டூர் அணையில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு தமிழக அரசு சார்பாக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், பின் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏன் அணையில் குவிந்துள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். அரசு அதிகாரிகளின் கண்களுக்கு அவைகள் பொக்கிஷமாக தெரியவில்லையா?

தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கும், மாநில நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் தாங்கள் கட்டுகின்ற கட்டடங்களுக்கு அதிகளவு வண்டல் மண் தேவைப்படும். அவர்களுக்கு இதற்கான ஒப்பந்தத்தை வழங்கினால் அரசு நிர்ணயிக்கின்ற அளவிற்கு மணலை அவர்களே அள்ளிக் கொள்ள போகிறார்கள். அதற்கான செலவினங்களை அவர்களே பார்த்து கொள்ள போகிறார்கள்.

மணலுக்கான யூனிட் தொகை அரசுக்கு அவர்கள் வழங்குவார்கள். இதன் மூலம் அணையில் இருக்கும் வண்டல் மண்ணும் அகற்றப்பட்டு அணையின் கொள்ளளவு அதிகப்படும், மேலும் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். மேட்டூர் அணையில் தூர் வாரினால் மட்டும் நம்மால் கூடுதலாக 30 டி.எம்.சி நீர் சேகரிக்க முடியும். இதே போல தமிழகத்தில் உள்ள மணிமுத்தாறு, வைகை, வீராணம், கல்லனை, பவானி சாகர் போன்ற அணைகளை தூர்வாரினால் மேலும் 50 டி.எம்.சி நீரை கடலில் வீணாய் கலக்காமல் நம்மால் சேமிக்க முடியும்.

இந்த வண்டல் மண்ணை அள்ளிக்கொள்ளும் வேலையை தனியார் நிறுவனங்கள் பார்த்துகொள்வார்கள். இவைகளை கண்காணிக்கவும், மற்ற வேலைகளை மேற்பார்வையிட அரசுக்கு அதிகபட்சம் 100 கோடி செலவாகும். மேலும் நாம் சேகரிக்கும் தண்ணீர் தமிழக விவசாய பாசனத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் மிக உதவிகரமாக இருக்கும்.

மேலும் இயற்கை நமக்கு வழங்குகின்ற மழை நீரை சேமிப்பதற்கான முறையான திட்டமிடல் அரசிடம் இல்லை. குறிப்பாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரி முறையாக பராமரித்தால் நமக்கு தேவையான தண்ணீர் தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அதை விட்டுவிட்டு ஏன் வீணாக ஆயிரக்கணக்கில் கோடிகளை செலவு செய்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாம் கொண்டு வர வேண்டும். அதன்மூலம் இயற்கையையும் மாசுபடுத்த வேண்டும். மழைக் காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாமல் கடலில் சென்று வீணாகின்ற நீரை நாம் சேமித்தாலே நம்முடைய தண்ணீர் தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம்” எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: வண்டலூர் பூங்கா கட்டணம் உயர்வு.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி.. பூங்கா நிர்வாகம் விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.