ETV Bharat / state

பேக்கரி கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட் கொள்ளை

author img

By

Published : Jan 12, 2022, 5:22 PM IST

சென்னையில் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து 25 ஆயிரம் ரூபாய், சிகரெட் பாக்கெட்டுகள், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

சென்னை காசி திரையரங்கம் எதிரே அப்துல் ரசிக் என்பவர் அல் அமீன் என்ற பெயரில் பேக்கரி கடை நடத்திவருகிறார். கரோனா இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று (ஜனவரி 11) இரவு 9.40 மணியளவில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம். காவலாளி அந்த நபரைப் பார்த்து யார் நீங்கள்? எனக் கேட்டுள்ளார்.

பேக்கரி கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

காவலாளியை நம்பவைத்து கொள்ளை

அதற்கு அவர், தான் இந்தக் கடையில் பணிபுரிந்துவருவதாகவும், தனது பொருள்கள் கடையின் உள்ளே இருப்பதாகவும் இது குறித்து முதலாளியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய காவலாளியும் கடை திறப்பதற்கு உதவி செய்துள்ளார்.

பின்பு கடையினுள் சென்ற கொள்ளையன் ஆறாயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், கல்லாவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய், எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

மற்றொரு நபரை உதவிக்கு அழைப்பு

மீண்டும் கடையின் ஷட்டரை மூடுவதற்குச் சிரமமாக இருந்ததால் அருகே சென்ற நபரை கொள்ளையன் அழைத்து அவரையும் ஏமாற்றி கடையை மூடியுள்ளார்.

பின்பு சாவகாசமாக கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இன்று (ஜனவரி 12) காலையில் கடைக்கு வந்த ஊழியர்களுக்கு கொள்ளை நடந்தது தெரியவந்தது.

கடை உரிமையாளர் இந்தச் சம்பவம் குறித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் கொள்ளையனைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: காவல் துறையில் காலிப்பணியிட அறிவிப்பு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.