ETV Bharat / sports

குதிரையேற்றப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 7:30 PM IST

Asian games 2023: ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றத்தில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹாங்சோவ் (சீனா): சீன நாட்டின் ஹாங்சோவ் மாகாணத்தில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 4வது நாளான இன்று குதிரையேற்றப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் திவ்யகீர்த்தி சிங், ஹ்ரிதய் விபூல் சேத்தா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜ்ஜேலா அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

  • It is a matter of extreme pride that after several decades, our Equestrian Dressage Team has won Gold in Asian Games!

    Hriday Chheda, Anush Agarwalla, Sudipti Hajela and Divyakriit Singh have displayed unparalleled skill, teamwork and brought honour to our nation on the… pic.twitter.com/9GtxWKcPHl

    — Narendra Modi (@narendramodi) September 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

திவ்யகீர்த்தி சிங், ஹ்ரிதய் விபூல் சேத்தா, அனுஷ் அகர்வாலா ஆகிய மூன்று பேரும் 209.205 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். முதல் மூன்று பேரின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதால் சுதிப்தி ஹஜ்ஜேலாவின் புள்ளிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. சீன அணி 204.882 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஹாங்காங் 204.852 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

அனுஷ் அகர்வாலா தனது குதிரை எட்ரோவுடன் அதிகபட்சமாக 71.088 புள்ளிகளைப் பெற்றார். அதேபோல் ஹ்ரிதய் விபூல் சேத்தா தனது எமரால்ட் குதிரையுடன் 69.941 புள்ளிகளும், திவ்யகீர்த்தி சிங் தனது அட்ரினலின் ஃபிர்டாட் குதிரையுடன் 68.176 புள்ளிகளும் சுதிப்தி ஹஜேலா தனது சின்ஸ்கி குதிரையுடன் 66.706 புள்ளிகளையும் பெற்றார்.

இந்த குதிரையேற்றப் போட்டியில் சீனா மற்றும் ஜப்பான் அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி தங்களது குழுவின் ஒத்துழைப்புடன் சாதித்துக் காட்டியுள்ளது. குழு குதிரையேற்றப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். கடைசியாக இந்திய அணி குதிரையேற்றப் போட்டியில் 1982ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது.

இந்திய அணி குதிரையேற்றப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப்பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி தனது X பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் “பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஆசிய விளையாட்டு குதிரையேற்றப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

திவ்யகீர்த்தி சிங், ஹ்ரிதய் விபூல் சேத்தா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜ்ஜேலா ஆகியோர் கொண்ட குழு சர்வதேச அளவில் தங்களது கூட்டு முயற்சியினால் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.