ETV Bharat / sports

அர்ஜென்டினா ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி... மெஸ்ஸி செய்த தரமான சம்பவம்... என்ன நடந்தது?

author img

By ANI

Published : Nov 22, 2023, 3:21 PM IST

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பிரேசில் அணியை அதன் சொந்த மண்ணில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வரலாற்று சாதனை படைத்தது. கடந்த 70 ஆண்டுகளில் பிரேசில அணி தனது சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்து உள்ளது.

argentina-beat-brazil-in-world-cup-qualifiers
argentina-beat-brazil-in-world-cup-qualifiers

பிரேசில்: பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு லீக் சுற்றில் பிரேசில் - அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்த போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்றது. போட்டிக்கு முன்னதாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயோ பிரேசில் ரசிகர்களுக்கும், அர்ஜெண்டினா ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதனால் பிரேசில் போலீசார் அர்ஜெண்டினா ரசிகர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். இதில் ரசிகர்கள் பலர் காயமடைந்தனர். இதனால் கோபமடைந்த கேப்டன் மெஸ்ஸி தனது அணியினரான ரோட்ரிக்ஸ், எமிலியானோ மார்டினஸ், ஓட்டோமெண்டி, டீ பால் உள்ளிட்ட இன்னும் சில வீரர்களை அழைத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்.

அப்போது கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் அர்ஜென்டினா ரசிகர்களை தாக்கிய போலீசாரின் கைகளில் இருந்த லத்தியை பிடுங்கி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை என வெளியேறுகிறோம் என மெஸ்ஸி கூறியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மெஸ்ஸி, தங்களது அணியினரை அழைத்து கொண்டு ஓய்வறைக்கு சென்றார். இதனால் ஆட்டம் 27 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. பேச்சுவார்த்தைக்கு பின் தொடங்கிய ஆட்டத்தில் முதல் 45 நிமிடங்கள் யாரும் கோல் அடிக்கவில்லை. பின்னர் 63வது நிமிடத்தில் அர்ஜென்டினா நிக்கோலஸ் ஓட்டமெண்டி தனக்கு கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.

இதன் மூலம் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை அதன் செந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது அர்ஜென்டினா. 70 ஆண்டுகளில் பிரேசில் அதன் செந்த மண்ணில் வீழ்வது இது இரண்டாவது முறையாகும். இதனையடுத்து மெஸ்ஸி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரசிகர்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலகக் கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்கா பிராந்தியத்தைச் சேர்ந்த அணிகளுக்கான புள்ளிப் பட்டியளில் 15 புள்ளிகளுடன் அர்ஜென்டினா அணி முதல் இடத்திலும், உருகுவே 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதையும் படிங்க: உலகக் கோப்பை 2023; சாதனைகள், தோல்விகள், வலிகள் என்னென்ன? - ஓர் அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.