ETV Bharat / sports

குஜராத் அணிக்கு புது கேப்டன்! முடிவுக்கு வந்த வதந்திகள்.. கேப்டனான சுப்மன் கில்! இதுக்கு இவ்வளவு அக்கப்போரு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 3:47 PM IST

ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Shubman Gill as a captain of Gujarat Titans
Shubman Gill as a captain of Gujarat Titans

ஹைதராபாத்: அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2024 தொடருக்கான மினி வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அணிகளுக்கிடையே வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரேடிங் முறை நடைபெற்றது. அதன்படி சில அணிகள் தங்களது வீரர்களை மற்ற அணிகளுடன் மாற்றி கொண்டன.

இதனைத் தொடர்ந்து, நேற்று (நவ. 26) அனைத்து அணி நிர்வாகங்களும் தங்களின் அணியில் வீரர்களை தக்க வைத்து கொண்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்ப்பித்தது. முன்னதாக, குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டதாக செய்திகள் பரவி வந்தன.

ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியாவின் பெயரும் இருந்தது. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்புவது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இரு அணிகளுமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.

ஹர்திக் பாண்டியா மும்பை திரும்பியதன் காரணமாக சுப்மன் கில்லை கேப்டனாக குஜராத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2018ஆம் அண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அறிமுகமான கில், அதன்பின் 2022ஆம் ஆண்டு ஏலத்தின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தேர்வானார்.

அறிமுகமான கடந்த 2022ஆம் சீசனிலேயே கோப்பையை வென்ற குஜராத் அணி, கடந்த 2023ஆம் ஆண்டு தொடரிலும் இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தியது. இந்த இரண்டு சீசன்களிலுமே தொடக்க வீரரான சுப்மன் கில் தனது அற்புதமான பங்களிப்பை அந்த அணிக்கு வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவர் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளார் என்ற செய்தி ஐபிஎல் ரசிகர்களை ஆச்சிரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் நீண்ட நாட்கள் அணியை வழிநடத்திச் செல்ல இளம் வீரர் தேவைப்படும் நிலையில், சுப்மன் கில்லை அந்த அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்து உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மினி ஏலம் மூலம் திறன் வாய்ந்த ஆல்-ரவுண்டரை அணிக்கு இழுக்க குஜராத் அணி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா..! எப்படி நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.