ETV Bharat / sports

IPL 2021 RCB vs KKR : கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு; மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் அரைசதம்

author img

By

Published : Apr 18, 2021, 5:53 PM IST

மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 204 ரன்களை குவித்துள்ளது

டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல்
ipl-2021-league-10-rcb-vs-kkr-first-innings

சென்னை: ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து ஆர்சிபி தொடக்கவீரர்கள் கோலி, படிக்கல் ஆகியோர் களமிறங்கினர். விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க கேப்டன் மோர்கன், வருண் சக்கரவர்த்தியிடம் ஓவரை கொடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

இரண்டாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே கோலி, ராகுல் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 6 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே கோலி எடுத்திருந்தார். அதே ஓவரின் கடைசி பந்தில், ராஜத் பட்டீதர் 1(2) ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும், தேவ்தத் படிக்கலும் அணியை சரிவிலிருந்து மீட்டது மட்டுமில்லாமல் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர்.

மேக்ஸ்வெல், ஷகிப் அல் ஹசான், வருண் சக்கரவர்த்தி, கம்மின்ஸ் என அனைவரின் பந்துவீச்சையும் தெறிக்கவிட்டார். இதனால் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

நிதானமாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 25 (28) ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் வெளியேறினார்.

இதன்பின் களமிறங்கிய ஏ பி டிவில்லியர்ஸ் மேக்ஸ்வெல் உடன் மறுமுனையில் பக்கபலமாக ஆடினார். இந்த ஜோடி வருண் வீசிய 15ஆவது ஓவரில் 17 ரன்கள் எடுத்து மிரட்டியது.

அதிரடியாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் 78 (49) ரன்களில் கம்மின்ஸிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

யார் வெளியேறினாலும், எதிர்புறத்தில் நங்கூரமிட்டு ஆடிவந்த டிவில்லியர்ஸ் தான் சந்தித்த 27ஆம் பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இது ஏபி டிவில்லியர்ஸ்-இன் 39ஆவது ஐபிஎல் அரைசதம் ஆகும்.

ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் 21 ரன்கள் குவித்ததன் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை எடுத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் தரப்பில் டிவில்லியர்ஸ் 76 (34) ரன்களுடனும், கைல் ஜேமிசன் 11 (4) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் வருண் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.