ETV Bharat / sports

Dhoni surgery : டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை... மருத்துவர்கள் அறிவுரை!

author img

By

Published : Jun 1, 2023, 10:10 PM IST

சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு கால் முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், மருத்துவர்களை அவரை சிறிது காலம் ஓய்வு எடுக்கக் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Dhoni
Dhoni

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டடதாக தகவல் வெளியாகி உள்ளது.

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கி, மே 29ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு தொடருடன் சென்னை அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெறுவதாக கூறப்பட்ட நிலையில், அவருக்காக கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என சென்னை வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

முதல் கட்ட ஆட்டங்களின் போதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனிக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட அவர், காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். பேட்டிங் செய்யும் போது ரன் எடுக்க ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி கையோடு மும்பை சென்ற டோனி, முழங்கால் காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். மும்பையில் உள்ள பிரபல கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டோனிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து அவருக்கு இடது முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தின்ஷா பர்திவாலா என்ற மருத்துவர் சிகிச்சை அளித்தார். விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பவரான பர்திவாலா, கிரிக்கெட் வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரபலமானவர்.

முன்னதாக கார் விபத்தில் படுகாயம் அடைந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்க்கும், பர்திவாலா தான் சிகிச்சை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, "சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு இடது முழங்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. அவர் நலமுடன் உள்ளார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் டோனி வீடு திரும்புவார். சிறிது காலம் ஓய்வுக்கு பின்னர் அவர் முழுமையாக உடல் தகுதி பெற்று மைதானத்திற்கு திரும்பவார்" என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டோனி தலைமையிலான சென்னை அணி 5வது முறையாக ஐ.பி.எல் கோப்பை உச்சி முகர்ந்தது. நடப்பு சீசனின் இறுதிப் போட்டி கனமழை காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தின் கடைசி பந்தில் அட்டகாசமாக பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு ஜடேஜா கோப்பையை வென்று கொடுத்தார்.

இதையும் படிங்க : ஐபிஎல் கோப்பையை வென்ற CSK! ஜட்டுவை லட்டுபோல் தூக்கி கொஞ்சிய தல தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.