ETV Bharat / sports

KKR VS DC : டெல்லி அணி முதல் வெற்றி - கொல்கத்தாவுக்கு தொடரும் பரிதாப நிலை!

author img

By

Published : Apr 21, 2023, 6:48 AM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ipl 2023
ipl 2023

டெல்லி : 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முன்னதாக மழை குறுக்கிட்டதால், இரவு 8.15 மணிக்கு தான் டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் இன்னிங்சை ஜேசன் ராய் மற்றும் லிட்டான் தாஸ் ஆகியோர் தொடங்கினர். மழையின் தாக்கம் மைதானத்தில் லேசாக காணப்பட்டது என்றே கூறலாம். இருப்பினும் பந்து வீச்சுக்கு மைதானம் ஒத்துழைப்பு வழங்கியது.

தொடக்க வீரர் லிட்டன் தாஸ் (4 ரன்) பவுண்டரி அடித்த கையோடு மைதானத்தை காலி செய்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராய் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சிக்க மறுபுறம் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினர்.

வெங்கடேஷ் ஐயர் டக் அவுட், கேப்டன் நிதிஷ் ரானா 4 ரன், மந்திப் சிங் 12 ரன், அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் 6 ரன், சுனில் நரேன் 4 ரன் என அடுத்தடுத்து விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். இதனிடையே அரை சதத்தை நோக்கி பயணித்த தொடக்க வீரர் ஜேசன் ராயும் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. கடைசியாக களமிறங்கிய ஆந்திரே ரஸ்செல் மட்டும் மட்டையை சுழற்றி அணி கவுரமான ஸ்கோரை எட்ட உதவினார். 20 ஓவர்கள் முடிவில் 127 ரன்கள் மட்டும் குவித்த கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

ஆந்திரே ரஸ்செல் மட்டும் 4 சிக்சர் 1 பவுண்டரி என 38 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார். டெல்லி அணியின் இஷாந்த் சர்மா, ஆன்டிரி நோர்ட்ஜ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 128 என்ற எளிய இலக்கை நோக்கி வார்னர் தலைமையிலான டெல்லி அணி களமிறங்கியது.

ஆரம்பம் முதலே டேவிட் வார்னர் அதிரடி காட்டத் தொடங்கினார். அவருக்கு பிரித்வி ஷா (13 ரன்) மிட்செல் மார்ஷ் (2 ரன்) பிலிப் சால்ட் (5 ரன்) மணீஷ் பாண்டே (21 ரன்) என பக்கபலமாக இருந்தனர். 11 பவுண்டரிகள் விளாசிய டேவிட் வார்னர் தன் பங்குக்கு 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

19 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அக்சர் பட்டேல் 19 ரன்களுடன் களத்தில் நின்றார். இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஆட்டங்களில் விளையாடி உள்ள டெல்லி அணி அதில் 1 வெற்றி 5 தோல்வி என 2 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி வீரர் இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க : RCB vs PBKS: சிராஜ் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப்: 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.