ETV Bharat / sports

CSK vs GT: முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம்... ஃபைனலுக்குள் நுழையுமா சிஎஸ்கே? எதிர்பார்ப்பில் 'தல' ரசிகர்கள்!

author img

By

Published : May 23, 2023, 2:40 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலம் பெற்றுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு நேரடியாக முன்னேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை அணி சொந்த மண்ணில் களம் இறங்குவதால், மஞ்சள் படைக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.

IPL
ஐபிஎல்

சென்னை: 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. ராஜஸ்தான், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட 6 அணிகள் வெளியேறின.

இந்நிலையில் இன்று (மே 23) முதல் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று நடைபெறும் முதலாவது தகுதிச்சுற்று (Qualifer 1) ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி (20 புள்ளிகள்), 2வது இடத்தில் உள்ள சென்னை அணியை (17 புள்ளிகள்) எதிர்கொள்கிறது. இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நம்பிக்கை தரும் தொடக்க ஜோடி: நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றி, 5 தோல்விகளைச் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவதால் சென்னை அணிக்கு ரசிகர்களின் ஆதரவை சொல்லத் தேவையில்லை. கடைசியாக டெல்லி அணியுடன் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் தொடக்க வீரர்கள் கெய்க்வாட், (504) கான்வே (585) நம்பிக்கை அளிக்கின்றனர். இருவரும் குவிக்கும் ரன்களைப் பொறுத்தே அணியின் ஸ்கோர் அமையும்.

மிடில் ஆர்டரில் ரகானே, ஷிவம் துபே, மொயின் அலி ஓரளவுக்கு கைகொடுக்கின்றனர். ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் பேட்டிங்கில் மிரட்டக் கூடியவர். கால் மூட்டு பிரச்னையை சமாளித்துக் கொண்டு நடப்பு சீசனில் அணியை வழிநடத்தும் கேப்டன் தோனி, தன்னால் முடிந்தளவுக்கு பங்களிப்பைக் கொடுத்து வருகிறார்.

பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே (20 விக்கெட்கள்) நம்பிக்கை தருகிறார். பதிரனா டெத் ஓவர்களை சிறப்பாக வீசினாலும், வைட் பந்துகளை வீசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் விக்கெட் கீப்பரையும் தாண்டி அந்த பந்து, பவுண்டரிக்குச் சென்று விடுகிறது. இது அணிக்கு நிச்சயம் பாதகத்தை ஏற்படுத்தி விடும். தீபக் சாஹர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா ஆகியோர் சுழலில் மிரட்டுவார்கள்.

Chennai vs Gujrat
சென்னை vs குஜராத்

குஜராத் எப்படி?: நடப்பு சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 10 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. கடைசியாக பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சுப்மன் கில் எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். பந்து எந்த திசையில் வந்தாலும், பவுண்டரிகளாக விளாசுகிறார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது சென்னை அணிக்கு மிகவும் முக்கியம்.

விருத்திமான் சாஹா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், திவேட்டியா, ஹர்திக் பாண்ட்யா என பெரும் பேட்டிங் பட்டாளத்தைக் கொண்டுள்ளது, குஜராத் அணி. பந்துவீச்சில் முகமது ஷமி (24 விக்கெட்கள்) ஃபார்மில் உள்ளார். ரஷித் கான் (24) நூர் அகமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னை அணியை வீழ்த்துவதற்காக குஜராத் அணி பல வியூகங்களை வகுக்கலாம்.

பந்து வீசுவாரா பாண்ட்யா?: குஜராத் அணியின் கேப்டன் பாண்ட்யா கடந்த 3 ஆட்டங்களில் பந்துவீசவில்லை. கடைசியாக மே 7ம் தேதி நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீசினார். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் பாண்ட்யா பந்துவீசவில்லையெனில், சென்னை மைதானத்தின் களத்தைப் பொறுத்து சானகா அல்லது திவேட்டியா பந்துவீச வாய்ப்புள்ளது. ஜோஷ் லிட்டில் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால், யஷ் தயாளுக்கு பதிலாக ஆடும் லெவனில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நானும் தோனியின் ரசிகன்': குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், "மகேந்திர சிங் தோனி மிகவும் சீரியசான நபர் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் அவரிடம் பல ஜோக்குகளை சொல்லி சிரிப்பேன். நான் அவரது ரசிகன். எனக்கு சகோதரர் போன்றவர் அவர். நான் தோனியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். தோனியை ஒருவர் வெறுக்க வேண்டுமென்றால் அவர் பேயாகத்தான் இருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

ஆட்டம் எங்கே?: சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

சென்னை உத்தேச அணி: ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா/பதிரனா

குஜராத் உத்தேச அணி: சுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சானகா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் திவேட்டியா, ரஷித் கான், மொகித் சர்மா, நூர் முகமது, முகமது ஷமி, யஷ் தயாள்/ஜோஸ் லிட்டில்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.