ETV Bharat / sports

ஐபிஎல் 2020: அணிகளில் ஏற்பட்ட பந்துவீச்சு மாற்றங்களும், கிடைத்த பலன்களும்!

author img

By

Published : Oct 28, 2020, 5:34 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்ட பந்துவீச்சு மாற்றங்களும், அதனால் கிடைத்த பலன்களும் குறித்து பார்க்கலாம்.

Smart bowling moves of this season's IPL
Smart bowling moves of this season's IPL

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்திருந்த லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்களை ஐபிஎல் அணிகள் செய்திருந்தன. அவற்றில் பந்துவீச்சாளர்களில் வரிசையில் ஏற்படுத்திய ஆச்சரியமளிக்கும் மாற்றங்கள் அணிகளுக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்து காண்போம்.

ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)

ஐபிஎல் தொடரின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்றால் அது பும்ராதான். தனது அபாரமான யார்க்கர் திறமைக்காகவும், அசத்தலான ஸ்விங்கிற்காகவும் பெயர்போன இவர், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடக்க ஓவர்களை வீசியிருந்தது மும்பை அணிக்கு பெரும் பக்க பலமாக அமைந்திருந்தது.

ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா

வழக்கமாக டெத் ஓவர்களில் கைத்தேர்ந்தவரான பும்ரா, இம்முறை தொடக்க ஓவர்களிலேயே எதிரணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மும்பை அணியின் போல்ட், குல்டர் நைல் எனத் தொடக்க பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும் பும்ராவை தொடக்க பந்துவீச்சாளராக மும்பை அணி தேர்வு செய்திருந்தது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)

அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன மேக்ஸ்வெல்லிற்கு இந்தாண்டு பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இதுவரை களமிறங்கிய போட்டிகளில் அவரின் பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் கொந்தளித்தது அனைவரும் அறிந்த ஒன்றே.

ஒரு கட்டத்தில் அவருக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறீர்கள் என்ற கேள்விகளும் பஞ்சாப் அணியிடம் தொடுக்கப்பட்டன. அதற்குப் பதிலளிக்கும்விதமாக பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், பந்துவீச்சாளராக மாறி அசத்திவருகிறார்.

கிளென் மேக்ஸ்வெல்
கிளென் மேக்ஸ்வெல்

அதிலும் குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடியைத் தருவது இன்னும் சிறப்பு. பஞ்சாப் அணியின் இந்த முடிவை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்ததில்லை என்பதே நிதர்சன உண்மை.

அக்சர் படேல் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)

டெல்லி அணியில் இடம்பெற்றிருக்கும் அக்சர் படேல், சமீப காலமாக அந்த அணியின் பவர் பிளே ஓவர்களை வீசிவருகிறார். இடக்கை சுழற்பந்துவீச்சாளரான இவர், தொடக்க ஓவர்களிலேயே எதிரணி பேட்ஸ்மேன்களைக் கதிகலங்க வைத்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்சர் படேல்
அக்சர் படேல்

அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கெதிரான போட்டியின்போது தனது முதல் ஓவரிலேயே வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு பெரும் உதவிபுரிந்தார்.

அணியின் சீனியர் பந்துவீச்சாளரான அஸ்வின் இருக்கையில், அக்சர் படேல் பவர் பிளே ஓவரை வீச டெல்லி அணி அனுமதியளித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருந்தாலும், அது அணியின் வெற்றிக்கு ஏற்பதாக அமைந்தது.

முகமது சிராஜ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

முகமது சிராஜின் பெயரை பந்துவீச்சாளர் பட்டியலில் பார்த்தாலே, ஆர்சிபி அணி தோல்வியைத் தழுவும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தது.

ஆனால் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தனது ஒரு முடிவினால் மாற்றிக் காட்டினார். கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் முகமது சிராஜிற்கு பவர் பிளேவில் பந்துவீச ஒரு வாய்ப்பினை வழங்கினார்.

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

இதனைச் சரியாகப் பயன்படுத்திய சிராஜ், ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே யாரும் படைத்திராத சாதனையாக தொடர்ந்து இரண்டு மெய்டன் ஓவர்களை வீசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தார்.

வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் சிராஜ், நடப்புச் சீசனில் ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனாக மாறியுள்ளது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.

நடராஜன் தங்கராசு (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக பேசக்கூடிய நபர்களில் முதன்மையானவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ‘யார்க்கர் நாயகன்’ நடராஜன் தங்கராசு. கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக வாய்ப்புக்காக காத்திருந்த நடராஜனுக்கு, நடப்பு ஐபிஎல் சீசன் மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது என்றுதான் கூற வேண்டும்.

ரபாடா, பும்ரா, ஆர்ச்சர், போல்ட் என சர்வதேச போட்டிகளில் கலக்கிவரும் முன்னணி பந்துவீச்சாளர்கள்கூட நெருங்க முடியா அளவிற்கு யார்க்கர் பந்துகளை அள்ளித் தெளித்துள்ளார் நடராஜன்.

நடராஜன் தங்கராசு
நடராஜன் தங்கராசு

இடக்கை வேகப்பந்துவீச்சாளரான நடராஜன், ஹைதராபாத் அணியின் தற்போதைய நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்துவருகிறார். இவரின் அபார பந்துவீச்சுத் திறனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கூடுதல் பந்துவீச்சாளராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெத் ஓவர்களில் இவரின் அபார யார்க்கர்கள் எதிரணியின் பேட்ஸ்மேன்களைதத் திக்குமுக்காடச் செய்வதால், ஹைதராபாத் அணியின் இந்த முடிவும் அவர்களுக்குப் பலனையே அளித்துள்ளது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ரசிகர்களுக்கு ஆச்சரியமளித்த சில முடிவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.