ETV Bharat / sports

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: ரோஹித் சர்மா நீக்கம் குறித்து வெளிப்படைதன்மை வேண்டும்- கவாஸ்கர்

author img

By

Published : Oct 27, 2020, 12:47 PM IST

ஷார்ஜா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் பெறாத நட்சத்திர தொடக்க வீரர், ரோஹித் ஷர்மா விவகாரத்தில் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: ரோஹித் சர்மா நீக்கம் குறித்து வெளிப்படைதன்மை வேண்டும்- கவாஸ்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: ரோஹித் சர்மா நீக்கம் குறித்து வெளிப்படைதன்மை வேண்டும்- கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி 20, மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில், காயம் காரணமாக கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

"பிசிசிஐ மருத்துவ குழு ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோரின் உடல் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கும்" என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்தது.

இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, ரோஹித் சர்மா வலைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும்பொருள் ஆகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது " ரோஹித் சர்மாவிற்கு எந்த மாதிரியான காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. அவரது காயம் தீவிரமாக இருந்தால், அவர் நிச்சயமாக வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார். அவர் வலைகளில் பயிற்சி செய்கிறார் என்றால், அவருக்கு உடல்ரீதியாக என்ன பிரச்னை இருக்கிறது என்பது பற்றி கொஞ்சம் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிப்பது அனைவருக்கும் உதவும் என்று நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதுகுறித்து தெரிந்துகொள்ள தகுதியானவர்கள் ” இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த இரண்டு போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடாத மயங்க் அகர்வாலின் பெயர், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளது. காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாத மயங்க் அகர்வால் பெயர் இடம்பெற்றிருக்கும்போது, ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் இடம் அளிக்காதது ரசிகர்களிடையே விவாத பொருளாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று டி 20 போட்டிகள், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர், நவம்பர் 27 முதல் ஜனவரி 19 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.