ETV Bharat / sports

LORDS TEST: ஷமியால் மீண்டது இந்தியா; இங்கிலாந்து அதிர்ச்சி தொடக்கம்!

author img

By

Published : Aug 16, 2021, 9:38 PM IST

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், தொடக்க வீரர்களான பர்ன்ஸ், சிப்ளி, ஹமீது, பேர்ஸ்டோவ் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்துள்ளனர்.

Mohammed Shami
Mohammed Shami

லண்டன் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 12) தொடங்கியது. இப்போட்டியில் மூன்று நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்தது.

நேற்றைய (ஆக. 15) நான்காம் நாள் ஆட்டத்தில் இந்தியஅணி 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்றைய நாளில் 8 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், இந்தியா 154 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, ரிஷப் பந்த் 14 ரன்களோடும், இஷாந்த் சர்மா 4 ரன்களோடும் இன்றைய (ஆக. 16) ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிதுநேரத்திலேயே ரிஷப் பந்த் 22 ரன்களுக்கும், இஷாந்த் 16 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

சேவியர் இன்னிங்ஸ்

அப்போது இந்திய அணி 182 ரன்கள்தான் முன்னிலைப் பெற்றிருந்தது. 200 ரன்களுக்குள் இந்தியா சுருண்டுவிடும் என்று ரசிகர்கள் முடிவுசெய்தனர்.

ஆனால், பும்ராவும், ஷமியும் இங்கிலாந்தின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினர். குறிப்பாக, ஷமி அடித்த ஆர்த்டாக்ஸ் கவர் - ஷாட்கள் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளித்தது என்றுதான் கூறவேண்டும்.

இருவரும் சேர்ந்து அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். 55 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்த ஷமி, மொயின் அலியன் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து அடித்து, தனது இரண்டாவது டெஸ்ட் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

இதனால், இந்திய அணி மதிய உணவு இடைவேளை முன்னர், 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைக் குவித்தது.

இந்தியா டிக்ளேர்

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இரண்டு ஓவர்களில் இந்தியா தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 109 ஓவர்களுக்கு 8 விக்கெட்கள் இழப்பிற்கு 298 ரன்களை எடுத்து, இங்கிலாந்து அணியை விட 271 ரன்கள் முன்னிலை பெற்றது.

முகமது ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி, ஒல்லி ராபின்சன் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

துவண்டது தொடக்கம்

இதையடுத்து, இங்கிலாந்து அணியினர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியது. பேட்டிங்கில் எப்படி ஷமி - பும்ரா கூட்டணி வெளுத்து வாங்கியதோ அதே போன்று பந்துவீச்சிலும் இந்த கூட்டணி மிரட்டியது.

பும்ரா வீசிய முதல் ஓவரில் பர்ன்ஸும், ஷமி வீசிய இரண்டாவது ஓவரில் சிப்ளியும் அடுத்தடுத்து டக்-அவுட்டானார்கள். இதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் ரூட், ஹமீத் உடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை நிலைத்து நின்று ரன்கள் குவித்துவிடுமோ என்ற அச்சம் எழுந்த வேளையில், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஹமீத், பேர்ஸ்டோவ் ஆகியோர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் தேநீர் இடைவேளை முன்னர்வரை (22 ஓவர்கள்) இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்துள்ளது.

மூன்றாவது செஷனில் ஏறத்தாழ 35 ஓவர்கள் இருப்பதால், இங்கிலாந்தின் வெற்றிக்கு 205 ரன்கள் தேவை என்ற நிலையில், விளையாடி வருகிறது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருப்பதால் இங்கிலாந்து அடித்து ஆடி வெற்றியை நோக்கியோ, டிராவை நோக்கியோ செல்லுமா அல்லது இந்தியாவிடம் வீழுமா என்பது இந்த செஷனில் இந்தியாவின் பந்துவீச்சுதான் முடிவுசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் செஷன்: இந்திய அணி - 26 ஓவர்கள் - 105/2

இரண்டாவது செஷன்: இந்திய அணி - 1.3 ஓவர்கள் - 12/0

இங்கிலாந்து - 22 ஓவர்கள் - 67/4

இதையும் படிங்க: ஆப்கான் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.