ETV Bharat / sports

Ashes Adelaide Test: மூன்றாவது நாளிலும் ஆக்ரோஷத்தை தொடர்ந்த ஆஸி.,

author img

By

Published : Dec 18, 2021, 8:45 PM IST

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் (ஆஷஸ் தொடர்) மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலியா அணி 282 ரன்களுடன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

Ashes Second test day
Ashes Second test day

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் 2021 - 22 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையடுத்து, ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 16) தொடங்கியது. பகலிரவு முறையில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வுசெய்தது.

ஒன்றரை நாள் பேட்டிங்

அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்களை எடுத்து இரண்டாம் நாளான நேற்று (டிசம்பர் 17) டிக்ளர் செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோசப் ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத் ஆகியோர் வழக்கம்போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், மழை குறுக்கிட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது, இங்கிலாந்து அணி 8.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்களை எடுத்தது. இரண்டாம் நாளில் இங்கிலாந்து 256 ரன்கள் பின்தங்கியிருந்தது. ரூட் 5 ரன்களுடனும், மலான் 1 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ரூட் - மலான் ஆறுதல்

இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 18) தொடங்கியது. ரூட், மலான் இருவரும் பொறுப்புடன் விளையாடி வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்களை எடுத்தது. முதல் செஷனில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.

இதன்பின்னரே, ஆட்டம் சூடுப்பிடிக்கத் தொடங்கியது. மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறிது நேரத்திலேயே, ரூட் 62 ஆட்டமிழந்தார். கடந்த போட்டியைப் போலவே இம்முறையும் கிரீன் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதையடுத்து, மலான் 80, ஓலி போப் 5, ஜாஸ் பட்லர் ரன் ஏதும் இன்றியும் வெளியேற, தேனீர் இடைவேளையில் 197 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது.

சிதறிய இங்கிலாந்து

நட்சத்திர பேட்ஸ்மேன் பென் ஸ்டோக்ஸ் களத்தில் இருந்ததால் மூன்றாவது செஷன் முழுவதும் இங்கிலாந்து பேட்டிங் செய்யும் என எதிர்பார்க்ப்பட்டது. ஸ்டோக்ஸ், வோக்ஸ் இருவரும் பொறுமையாக இணை சேர்ந்து 33 ரன்கள் எடுத்தது. அப்போது, கிறிஸ் வோக்ஸ் 24 ரன்களிலும், அடுத்த வந்த ஓலி ராபின்சன் ரன் ஏதும் இன்றியும் பெவிலியன் திரும்ப இங்கிலாந்து இன்னிங்ஸ் முடிவை நெருங்கியது.

கிரீன் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் பிராட் ஆகியோரும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், நாதன் லயான் 3 விக்கெட்டுகளையும், கேம்ரூன் கிரீன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின்னர், 237 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 95 ரன்களை எடுத்த ஓப்பனர் டேவிட் வார்னர், இந்த இன்னிங்ஸில் துரதிஷ்டவசமாக 13 ரன்களில் ரன் அவுட்டானார்.

முன்னிலையில் ஆஸிதிரேலியா

இதையடுத்து, நைட் வாட்ச்மேனாக மைக்கெல் நெசர் களமிறங்கினார். மார்கஸ் ஹாரிஸ் - மைக்கெல் நெசர் இணை இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்தது. ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 45 ரன்களை எடுத்துள்ளது.

தற்போது 282 ரன்களுடன் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா 450 ரன்களுக்கும் மேலாக இலக்கை நிர்ணயித்து, நாளைய போட்டியின் மூன்றாவது செஷன் வரை தாக்குபிடித்து தனது ஆதிக்கத்தை தொடர வாய்ப்புள்ளது என கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

நான்காம் நாள் ஆட்டம் - இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும்

இதையும் படிங்க: டெஸ்ட் தொடரில் துணை கேப்டனான கே.எல்.ராகுல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.