ETV Bharat / sports

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 259 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா!

author img

By ANI

Published : Dec 30, 2023, 7:04 PM IST

IND Vs AUS 2nd ODI: இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 8 விக்கெட்கள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட்
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட்

மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், இன்று (டிச.30) 2வது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் அணியின் கேப்டன் அலிசா ஹீலி களம் இறங்கினர். இதில், அலிசா ஹீலி 13 ரன்களில் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, எல்லிஸ் பெர்ரி - ஃபோப் லிட்ச்ஃபீல்ட் கூட்டணி சேர, இந்த கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன்களை சேர்த்தது. அரைசதம் கடந்த எல்லிஸ் பெர்ரி, தீப்தி சர்மாவின் பந்து வீச்சில் ஸ்ரேயங்கா பாட்டீலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதையடுத்து, பெத் மூனி 10, லிட்ச்ஃபீல்ட் 63, தஹ்லியா மெக்ராத் 24, சதர்லேண்ட் 23, ஜார்ஜியா வேர்ஹாம் 22 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு, 258 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட் ஹால்களை எடுத்து அசத்தினார். மற்ற பந்து வீச்சாளர்களான பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சினே ராணா ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகின்றது.

தொடக்க வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் ரிச்சா கோஸ் ஆகியோர் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். இந்திய அணி 15 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்திய அணி: ஸ்மிருதி மந்தனா, யாஸ்திகா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பட்), சினே ராணா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா தாக்கூர் சிங்.

ஆஸ்திரேலிய அணி: அலிசா ஹீலி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், டார்சி பிரவுன்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி விலகல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.