ETV Bharat / sports

India Vs Australia : உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்! வெற்றி யாருக்கு?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 6:01 AM IST

Cricket World Cup 2023: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

India vs Australia 2023
India vs Australia 2023

சென்னை: இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 13வது உலக கோப்பை தொடரின் இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் இன்று (அக். 7) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது.

இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரை இம்முறை இந்தியா மட்டும் முழுவதுமாக நடத்துகிறது. இந்த தொடருக்கான போட்டிகள் அனைத்தும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகின்றன.

இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்று உள்ளன. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள், போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், நடைபெற்று வருகின்றன.

மைதானத்தின் மேற்கூரை, இருக்கைகள், உணவறைகள், ஊடக அறை, கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதே போல் வீரர்களின் ஓய்வுறை, மைதானத்தின் பிட்ச், மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் என பல்வேறு விஷயங்களில் மைதான நிர்வாகிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இன்று (அக். 7) நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதனாத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தை காண, வெளிமாநிலங்களில் இருந்து இந்திய ரசிகர்கள் அனைவரும் சென்னைக்கு படை எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றி

உலக கோப்பை போட்டிகளில், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடி வந்தாலும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் தான், இந்தியா அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா தனது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா - பாகிஸ்தான் அட்டத்திற்கு பிறகு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டி என்றால் அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தான்.

உலக கோப்பையில் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள்: உலக கோப்பை தொடரில், 1975 முதல் 2019 வரை ஆஸ்திரேலியா அணி இதுவரை, 85 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 61 வெற்றிகளும், 21 தோல்விகளும் அடங்கும். ஒரு போட்டி டிராவாகவும், இரு போட்டிகளுக்கு எவ்வித முடிவும் கிட்டவில்லை. ஆஸ்திரேலிய அணியானது 1987, 1999, 2003, 2007, 2015 ஆண்டுகள் என 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. உலக கோப்பை தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் ஆஸ்திரேலியா தன் வசம் வைத்து உள்ளது.

அதேப்போல் இந்திய அணியானது, உலக கோப்பை தொடரில், 1975 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 84 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 53 வெற்றியும், 29-ல் தோல்வியும் சந்தித்து உள்ளது. ஒரு போட்டி டிராவும், ஒரு போட்டிக்கு எவ்வித முடிவும் இல்லை. மேலும், இந்திய அணி 1983 மற்றும் 2011ஆம் ஆண்டு என இரண்டு முறை உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது.

சேப்பாக்கம் மைதானம் யாருக்கு: சேப்பாக்கம் மைதானம் என்பது, சுழற்பந்துக்கு ஏற்றது, அதே சமயம் பேட்டிங்க்கும் ஒத்துழைப்பு வழங்கக் கூடியது. அதனால், இரண்டுக்கும் சாதகமாகவே அமையும். மேலும், இந்திய அணியில், 3 சுழற்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலியா அணியில், 3 சுழற்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர்.

மேலும், டெல்லி, பெங்களூருவை விட சென்னை ஆடுகளம் அளவில் பெரியது. இதனால் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் மைதானத்தின் சூழ்நிலை, ஆட்டத்தின் சூழ்நிலை ஆகியவற்றை தகவமைத்துக் கொண்டு விளையாடுவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருந்தார்.

இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் அணியில் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த போதும், அணியில் சும்பான் கில் இருப்பிடம் குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா பதிலளிக்காமல் தவிர்த்தார். அதனால் அவர்து இருப்பு குறித்து இறுதியில் முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்திய அணியில் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை பறி கொடுக்காமல் விளையாடியானல் இந்தியாவிற்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக கடந்த மாதம் இறுதியில் இந்த இரு அணிகளுக்கு இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

உலக கோப்பையில் நேருக்கு நேர்: உலக கோப்பை வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில் ஆஸ்திரேலியா அணி 8 முறை வென்று உள்ளது. இந்திய அணி 4 முறை மட்டுமே வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் போது மழையின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில் இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் அல்லது மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இதையும் படிங்க: Cricket World Cup 2023: உலக கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்காவின் சாதனைகள்! ஒரு லிஸ்டே இருக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.