ETV Bharat / sports

இலங்கையை ஒயிட் வாஷ் செய்தது தென் ஆப்பிரிக்கா!

author img

By

Published : Jan 5, 2021, 7:02 PM IST

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

South Africa takes series as Sri Lanka's resistance fades
South Africa takes series as Sri Lanka's resistance fades

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிது. இதில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இலங்கை முதல் இன்னிங்ஸ்

அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் குசால் பெரேராவைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக குசால் பெரேரா 60 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஆண்ட்ரிச் நோர்ஜ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் டீன் எல்கர் சதமடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக டௌசனும் அரைசதம் கடந்து உதவினார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 302 ரன்களை எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டீன் எல்கர் 127 ரன்களை எடுத்தார். இலங்கை அணியின் விஷ்வா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாறிய இலங்கை

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி மீண்டும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் கருணரத்னே நிலைத்து நின்று சதமடித்தார்.

பின்னர் அவரும் 103 ரன்களில் விக்கெட்டை இழக்க இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 211 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென் ஆப்பிரிக்கா அணிக்கு 67 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டீன் எல்கர் - மார்க்ரம் இணை சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி 13ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்தது.

மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டீன் எல்கர் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க:AUS vs IND: வலைப்பயிற்சியில் ரஹானே & கோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.